பக்கம் எண் :

289

 

தமக்கு  வள்ளுவனைக் காட்டிலும் அவர்கள் மேம்பட்டவராகத்
தோன்றாமையின், அவரைப் பாடுவதற்குச் சிறிதும் அவாவாதவர். நாஞ்சில்
நாட்டில் விதைத்த வித்து மழையில்லை யெனக் கெடுதலின்றிக்
கரும்புபோல வளமுற வளர்ந்து விளையும் என்றும், கோடையால்
நீர்நிலைகள் வற்றுவதில்லை யென்றும், கடனோக்கி யோடும் ஆறுகள்
தெளிந்த நீருடனே வேங்கைப் பூக்களைக் கொண்டு செல்லும் என்றும்
பாடி, “பெருங்கல் நாடனே, நீ வாழ்வாயாக; நின்னைப் பெற்றமையால் நின்
தந்தை தாயர் வாழ்க” என்று பாராட்டியுள்ளார்.

 இரங்கு முரசி னினஞ்சால் யானை
முந்நீ ரேணி விறல்கெழு மூவரை
இன்னு மோர்யா னவாவறி யேனே
நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய
5கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
 கழைக்கரும்பி னொலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்ப்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரி னாளும்
10பொன்னன்ன வீசுமந்து
 மணியன்னநீர் கடற்படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
சிறுவெள் ளருவிப் பெருங்க னாடனை
நீவா ழியர்நின் றந்தை
15தாய்வா ழியர்நிற் பயந்திசி னோரே.   (137)

     திணை : அது. துறை : இயன்மொழி; பரிசிற்றுறையுமாம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

    உரை : இரங்கு முரசின் - ஒலிக்கும் முரசினையும்; இனம் சால்
யானை - இனமமைந்த யானையையுமுடைய; முந்நீர் ஏணி விறல் கெழு
மூவரை - கடலாகிய எல்லையையுடைய நிலத்தின் கண் வென்றி
பொருந்திய மூவேந்தரை; இன்னும் ஓர் யான் அவா வறியேன் -
இன்னமும் யானொருவனே பாடும் அவாவை யறியேன்; நீயே முன்
யான் அறியுமோன் - நீதான் முன்னே தொடங்கி யான்
அறியு மவன்; துவன்றிய கயத்திட்ட வித்து - நீர்நிறைந்த
பள்ளத்தின்கண் விதைத்த வித்து; வறத்திற் சாவாது - நீரின்மையாற்
சாவாது; கழைக் கரும்பின் ஒலிக்குந்து - கரும்புபோலத் தழைக்கும்;
கொண்டல் கொண்ட நீர் - மழையால் முகந்து சொரியப்பட்ட நீர்;
கோடை காயினும் கண்ணன்ன மலர் பூக்குந்து - கோடை காயினும்
மகளிர் கண்போன்ற குவளை முதலிய மலர் பூக்கும்;