பக்கம் எண் :

290

 

கருங் கால்  வேங்கை மலரின் - கரிய தாளையுடைய வேங்கை
மலரின்; நாளும் பொன்னன்ன வீ சுமந்து - நாடோறும் அப்
பொன்போலும்  பூவைச்  சுமந்து;  மணியன்ன நீர் கடற் படரும் -
மணிபோலும் நீர் கடற்கட் செல்லும்; செவ்வரைப் படப்பை நாஞ்சிற்
பொருந - செவ்விய மலைப்பக்கத்தையுடைய நாஞ்சிலென்னும்
மலையையுடைய பொருந; சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை
- சிறிய வெளிய அருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டை
யுடையாய்; நீ வாழியர் - நீ வாழ்வாயாக; நிற்பயந் திசினோர் நின்
தந்தை தாய் வாழியர் - நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும்
தாயும் வாழ்க எ-று.

     நீர் மலர் பூக்குமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல்
ஏறிநின்றது. கோடைக்காயினு மென்பது பாடமாயின், கோடைக் கட்காயினு
மென்றானும், கோடைக்கணாயினு மென்றானு முரைக்க. முன்னின்ற
பெயரெச்ச மூன்றும் நாஞ்சிலென்னும் நிலப்பெயர் கொண்டன. தன் பழமை
தோன்றப் புகழ்ந்து கூறுவான், மூவரையும் பாடுமவாவை இன்னுமறியே
னென்றதாகக் கொள்க.

     விளக்கம்: விறல் கெழு மூவரென்றது, சேர சோழ பாண்டியர்களை.
ஏணி - எல்லை; “நளியிரு முந்நீ ரேணியாக” (புறம். 35) என்புழிப்போல.
அவாவறியேன் - பாட விரும்பி யறியேன். தமிழ்ச் சான்றோ ரனைவர்க்கும்
தமிழ் மூவேந்தரைப் பாடுதற் கியல்பாகவே அவாவுண்டாகுமாயினும்
யானொருவனே அவ்வாறு அவாவாதவன் என்பார், “இன்னும் ஓர் யான்
அவாவறியேன்” என்றார். கண்ணன்ன மலர் எனப் பொதுப்படக்
கூறினமையின், சிறப்புடைய மகளிர் கண்ணென்பது கொள்ளப்பட்டது.
இப்போதுள்ள நாஞ்சில் நாட்டிலுள்ள மலைகளுள் நாஞ்சில்மலையின்ன
தெனத் தெரிந்திலது. பூத்தல் வினை மலர்க்குரித்தாயினும், நீரின்
வினையாகக் கூறப்படுதலின், மலரின் வினை அதற்கிடமாகிய நீர்மேலேறி
நின்றதென்றார். நிலப்பெயர். இடப்பெயர் “விறல்கெழு வேந்தர் மூவரையும்
அறியேன். நீயே யான் முன்னறியு மோன்” என்றது, இவ்வாசிரியர்க்கு
இவன்பாலுள்ள பழமைத் தொடர்பு விளக்குவது காண்க. மணி, பளிங்கு மணி.
“பளிங்கு வகுத்தன்ன தீநீர்” (புறம். 150) என்று பிறரும் கூறுதல் காண்க.
ஒலிக்கும், பூக்கும், படரும் என்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சில் என்னும்
இடப்பெயர் கொண்டன ஒலிக்கும், பூக்கும் என்பன, உம் உந்தாய் நின்றன.

                   138. நாஞ்சில் வள்ளுவன்

     ஒருகால், மதுரை மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனை
யடைந்து அவன் மிக்க பரிசில் தரப்பெற்றுச் சென்றார். செல்பவர் வழியில்
பாணர் கூட்டமொன்று வரக் கண்டு, அவர்களில் மூத்தோனை நோக்கி,
“நீசெல்வர் பிறரை நினையாது, நாஞ்சில் வள்ளுவனை நினைந்து போவது
நோக்க நீ விரிந்த பெரிய மனமுடையனாகத் தோன்றுகின்றாய்;