பக்கம் எண் :

291

 

நீ குறித்துச் செல்லும் வள்ளலோ பின்றையோ, நாளையோ வாவென
மொழிபவ னல்லன்” என்றாராக, அவன், தான் இதற்கு முன்பும்
அவன்பாற்   சென்று  பரிசில்பெற்றுவந்தமை   தெரிவித்து,  இனி
அவ்வாறு  பெற  முடியுமோ   என  மையல்   நோக்கம்   கொண்டான்.
அவற்கு மருதன் இளநாகனார், “அவன் கிளியீடு வாய்த்தாற் போல்பவன்;
அவன் பாற் செல்லும் நின்னை முன்னே வந்து போன பழைய பாண
னெனத் தெரிந்துரைப்பார் யாவருளர்? நீ இன்னே இனிது செல்க” என
இப்பாட்டின்கண் குறித்துரைத்துள்ளார்.

 ஆனினங் கலித்த வதர்பல கடந்து
மானினங் கலித்த மலைபின் னொழிய
மீனினங் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
5சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண
 நீயே பேரெண் ணலையே நின்னிறை
மாறி வாவென மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பி னாயிழை கணவன்
கிளிமரீஇய வியன் புனத்து
10மரனணி பெருங்குர லனைய னாதலின்
 நின்னை வருத லறிந்தனர் யாரே.    (138)

     திணை : அது. துறை : பாணாற்றுப்படை. அவனை மருதன்
இளநாகனார் பாடியது.

     உரை : ஆனினம் கலித்த அதர்பல கடந்து - பெற்றத்தினது
இனம்  மிக்க  வழிபலவும்   வந்து;  மான்  இனம் கலித்த மலை
பின்னொழிய - மான்  திரள் மிக்க மலை பின் கழிய; மீனினம்
கலித்ததுறைபல நீந்தி - மீனினம் தழைத்த துறை பலவற்றையும்
நீந்தி;  உள்ளி   வந்த - நினைத்து   வந்த; வள்ளுயிர்ச் சீறியாழ் -
வள்ளிய ஓசையை யுடைத்தாகிய சிறிய யாழையும்; சிதாஅர் உடுக்கை
முதா அரிப் பாண - சிதாராகிய உடையையுமுடைய மூத்த பாணனே;
நீ  பேரெண்ணலை - நீதான்    அவன்பாற்     சில    கருதிப்
போகின்றமையின்   பெரிய  எண்ணத்தையுடைய;  நின்   இறை -
நின்னுடைய தலைவன்;மாறி  வா என மொழியலன் - இப்பொழுது
போய்ப் பின்னொரு நாட் பரிசிற்கு வாவென்று சொல்லான்; ஒலியிருங்
கதுப்பின்  ஆயிழை   கணவன் - தழைத்த  கரிய  கூந்தலையுடைய
ஆயிழைக்குத் தலைவன்; கிளி  மரீஇய  வியன்  புனத்து - கிளி
மருவியஅகன்ற புனத்தின் கண்; மரன் அணி பெருங் குரல்
அனையன் ஆதலின் - மரப்பொதும்பின்கண்    வைத்த    பெரிய
கதிரை யொப்பனாதலின்; நின்னை வருதல் அறிந்தனர் யார் - நீ
அவன்பாற் பரிசில்பெற்று வருதற்கண் நின்னைப் பழைய பாணன்
என்று அறிவார்யார் எ-று.