| நின்னை வருதல் அறிந்தனர் யார் என்றதன் கருத்து, நின்னை யறிவாரும் அறியாத தன்மையையாவை யென்பதாம். அறிவார் யாரென்பது அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று. நினக்கு அவன் பரிசில் தப்பாமல் தருமென்பான் நின்னிறை யென்றான். கிளி மரீஇய வியன்புனத்து மரனணிபெருங்குரலனையன் என்றது, கிளியீடு வாய்த்தாற் போல்வனென்னும் வழக்குப்பற்றி நின்றது.
விளக்கம் : துறை: நீர்த் துறை. முதுமையையுடைய பாணனை முதா அரிப் பாணன் என்றார்; முதிர்ந்த காயை முதாரிக்காய் என்பது போல. பெருங்கொடை வேந்தர் பலர் இருப்பவும், நாஞ்சில் வள்ளுவனை நயந்து சேறலின், பேரெண்ணலை யென்றார். எண்ணல் எண்ணம். அறிந்தனர் யார் என்றவிடத்து, அறிதற்குரிய நின்னைப் பழைய பாணன் என்று அறிவார் யார் என்பது வருவிக்கப்பட்டது. பரிசில் பெற்றவழி இப் பாணனது பண்டைநிலை, பெற்ற செல்வத்தால் மறைந்து போமென்பது எய்த அறிந்தனர் யார் என்றதன் கருத்து நின்னை யறிவாரும் அறியாத தன்மையை யாவையென்பதாம் என்றார். அறிவார் யார் என எதிர்காலத்தில் கூறற்பாலதனை இறந்த காலத்திற் கூறியது காலமயக்கம். இது தெளிவுபற்றி வந்தது. பண்டும் பரிசில் தந்து சிறப்பித்துள்ளதோடு இப்போதும் அது தருதற்குச் சமைந்திருத்தலின், நின்னிறை என்றான்; எனவே, அவன் பரிசில் பெறுவது தப்பாதாயிற்று. கிளியீடு வாய்த்தாற்போல வென்பது பிற்காலத்தே இல்லார்க்குக் கிழயீடு வாய்த்தாற் போல என வழங்குவதாயிற்று.
139. நாஞ்சில் வள்ளுவன்
பிறிதொருகால், மருதனிள நாகனார் வள்ளுவன்பால் பரிசில் பெறுதல் வேண்டிச் சென்றார். தமக்குப் பரிசில் இன்றியமையாமையும் அதனை விரையப் பெறவேண்டி யிருத்தலையும் அவற்கு நேரே யுரைத்தல் இயலாமையின், பாணன் ஒருவன் விரும்பிக் கேட்கும் வாய்பாட்டால், இப்பாட்டின்கண் வைத்து, வேந்தே, என் பின்னே வரும் இளைய மகளிரும் விறலியரும் வாழ்தல் வேண்டியான் பொய் கூறுவேனல்லேன்; மெய்யே கூறுகின்றேன்; எனது இப்போதைய நிலைமை நீ மனம் கனிந்து நல்கும் காலத்தை நோக்கியிருத்தற் கேற்றதன்று, நினக்குரிய முடிவேந்தனாகிய சேரனோ, நினக்கு வேண்டியவற்றை வேண்டியாங்குக் கொடுத்தற்கு அஞ்சான்; அவன் பொருட்டு நீ சாதற்கும் அஞ்சாய்; ஒருகால் போருண்டாயின், நின் செவ்வி கிடைக்குந் துணையும் என் சுற்றம் பசித்துன்பத்தைப் பொறாது; ஆதலால் யாம் வேண்டும் பரிசிலை இன்னே தருவாயாக எனக் குறித்துள்ளார்.
| சுவலழுந்தப் பலகாய சில்லோதிப் பல்லிளைஞருமே அடிவருந்த நெடிதேறிய கொடிமருங்குல் விறலியருமே | 5 | வாழ்தல் வேண்டிப் | | பொய்கூறேன் மெய்கூறுவல் |
|