| இன்னாது உறைவி - காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள்; அரும் படர்களைமே - பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக எ-று.
பேக, இன்னா துறைவி அரும் படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இது எனக் கூட்டுக. இதுவென்றது, அப்படிப் படர் களைதலை. மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப், படாஅ மீத்த கெடா நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக; என்ற கருத்து; இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள் பண்ணுகின்ற நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளா தொழிதல் தகாதென்பதாம்.
இனி, அருள் வெய்யோய், யாம் இரந்த பரிசில், அறஞ்செய்ய வேண்டுமென்று கூறுமிது; அவ் வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள் பெறாமையின் இன்னாதுறைவி அரும் படரை நீ சென்று களைதல்; அதனைச் செய்வாயாக வெனக் கூட்டி யுரைப்பினு மமையும். பனிக்கு மென்றஞ்சி யென்பதூஉம் பாடம்.
விளக்கம் : மடத்தகை யென்றவிடத்து மடமை, மென்மை. பரிக்கப்படுவது பாரம். அதனால், பரிக்கப்படும் சுற்றத்தாரைப் பாரம் என்றார். இசையிடத்துப் பிறக்கும் இன்பம், ஈண்டு நயம் எனப்பட்டது. அறமாவது செய்யத் தகுவது. தம்மாற் காதலிக்கப்பட்டாரைத் தலையளித்தல் தலைவர்கட்கு அறமாதலால், காதலியாகிய கண்ணகிக்குத் தலையளி செய்க என்பார் அறஞ் செய்தீமோ என்றார். அஃதென்பது நின்று வற்றாவாறு பொருளமைதி காட்டுதற்கு, இனி அருள் வெய்யோய்... அமையும்என்றார்.
146. வையாவிக் கோப்பெரும் பேகன்
அந்நாளில், சேர மன்னருள் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடி, அவன் தந்த நாட்டரசைத் தான் மேற்கொள்ளாது அவனையே மேற்கொண்டு ஆட்சி புரியுமாறு இரந்து பின்னின்று வண் புகழ் பெற்று விளங்கின சான்றோர் அரிசில்கிழார் என்பவர். அவரது ஊராகிய அரிசில் என்பது அரிசிலாற்றங்கரையில் விளங்கிய ஊராகு மென்று அறிஞர் கருதுவர். வேளாண்குடித் தோன்றலாகிய இக் கிழார் தகடூரிடத்தே இரும்பொறையொடு பொருது வீழ்ந்த அதியமான் எழினியிடத்தும் நல்ல அன்புடையர். தகடூரை வென்றதனாற் சேரனுக்குண்டாகிய சிறப்பைப் பதிற்றுப்பத்து எட்டாம் பத்தினும், வீழ்ந்த எழியினின் சிறப்பை இத் தொகை நூற்கண் வரும் கன்றம ராயமெனத் தொடங்கும் பாட்டினும் (230) பாராட்டிப் பாடியுள்ளார். சேரனது பண்பை, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து, நன்றறியுள்ளத்துச் சான்றோ ரன்ன நின் பண்பு(பதிற்.72) என்றும், தான் உணர்வன முழுதுணர்ந்து பிறர்க்குரைத்து நல்வழிப்படுத்தும் நரைமூதாளனாகிய புரோகிதனைத் தெருட்டிய நலத்தை வண்மையு மாண்பும் வளனு மெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க் கென, வேறுபடு நனந்தலைப் பெயரக், கூறினை பெரும (பதிற். 74) என்றும் பாராட்டுவர். தகடூரை யெறிதற்கு முன் சேரன்பொருட்டு இவர் அதியமான் எழினியை யடைந்து சேரனது படைப்பெருமையை யுணர்த்திய ஞான்று அவன் கேளாதொழிந்தனன். |