பக்கம் எண் :

307

 

பெறல் வேண்டேம் - பெறுதலை விரும்பேம்; அடுபோர்ப் பேக
- கொல்லும் போரையுடைய பேக; சீறி யாழ் செவ்வழி பண்ணி
- சிறிய யாழைச் செவ்வழியாகப்பண்ணி வாசித்து; நின் வன்புல
நன்னாடு பாட - நினது வலிய நிலமாகிய நல்ல மலைநாட்டைப்
பாட; என்னை நயந்து பரிசில் நல்குவை யாயின் - என்னைக்
காதலித்துப் பரிசில் தருகுவையாயின்; குருசில் - தலைவனே; நீ
நல்காமையின் - நீ அருளாமையால்; நைவரச் சாஅய் - கண்டார்
இரங்க மெலிந்து; அருந் துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை
- அரிய துயரத்தான் வருந்தும் உன்னுடைய திருந்திய
அணியையுடைய அரிவையது; கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் - தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றக்
குவித்தாற்போன்ற தழைத்த மெல்லிய கூந்தற்கண்ணே; கமழ் புகை
கொளீஇ - மணம் கமழும் புகையைக் கொள்ளுவித்து; தண் கமழ்
கோதை புனைய - குளிர்ந்த மணங் கமழும் மாலையைச் சூட;
வண்புரி நெடுந் தேர் நின் மா பூண்க - வளவிய செலவையுடைய
உயர்ந்த தேரை நின் குதிரைகள் பூண்பனவாக எ-று.

     அன்னவாக வென்றது, இரவலர்க்கு அருங்கல வெறுக்கைகளை
எளிதிற் கொடுப்பை யன்றே; அவ் வெறுக்கை எமக்கும் எளிதாக
என்றவாறாம்.

     விளக்கம்: இரவலராகிய எம்பால் நீ செய்யும் அருளும் கொடையும்
என்றும் திரியாது எளிதில் அமையும். அத்தன்மையவேயாக இருப்ப, நின்
மனைவிபாற் செய்யும் தலையளியிற்றான் அத்தன்மை சிறிது திரிந்தனை
யென்பதுபட, “அன்னவாக”என்றார். செவ்வழி, இரங்கற் பண். நின்
அரிவைக் குண்டாகிய துயரத்தை அவள் வாய்திறற் துரையாதே மெய்யே
நன்கு புலப்படுமாறு மெலிந்து காட்டுகிற தென்பார், “நைவரச் சாஅய்”
என்றும், அது நீ அருளாமையால் வந்ததென்பார், “நல்காமையின்”என்றும்
கூறினார். மகளிர் கூந்தற்கு மயிற் கலாவத்தை யுவமை கூறுதல் மரபு;
பிறரும், “ஒலிமயிற் கலாவத் தன்ன இவள் ஒலி மென் கூந்தல்”(குறுந்.225)
என்பது காண்க. கணவனைப் பிரிந்த மகளிர் தம்மை ஒப்பனை
செய்துகொள்வதிலராகலின், “கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை
புனைய”என்றார்.

                 147. வையாவிக் கோப்பெரும் பேகன்

     இந்நிலையில் பெரும்பேகனைத் தெருட்டற்குப் போந்த
சான்றோர்களுள் பெருங்குன்றூர்கிழார் என்பாரும் ஒருவர். இவர்
சோழவேந்தனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் கண்டு,
தாமுற்ற வறுமை யறிவித்துப் பரிசில் பெற்றவர். பின்னர் ஒருகால் இவர்
குடக்கோப் பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டார். அவனுக்குத்
தம்மைப் பற்றி வருத்தும் வறுமைத் துன்பத்தையும், தாம் பிரிந்துறைதலின்
தம்முடைய மனைவியார் எய்தும் வருத்தத்தையும் தெரிவித்தார்.