| துன்புற்றுக் கூந்தல் நெய்யும் பூவும் அணிதலின்றிப் பொலிவிழந்திருப்பது கூடாதென்பதுபட நின்றது. நீ அவள் பால் சென்று அருளுதல் வேண்டும் என்பார், அருள்பெற்றவழி அவள் செய்துகொள்ளும் ஒப்பனையை யெடுத்தோதினார். தமக்குச் சால்பு அதுவாகலின். காதலன்புடைய மனைவியும் கணவனுமாயினார் பிரிந்திருப்பின், இருவரையும் ஒன்றுபடுத்தி வாழ்வு இனிது நடாத்தப் பண்ணுதல் சான்றோர்க்குச் சால்பென்பது, சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய (தொல். கற்.13) என்றும், நம் மூர்ப்பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ(குறுந்.146) என்றும் வருவனவற்றால் அறியப்படும்.
148. கண்டீரக் கோப்பெரு நள்ளி
இவன் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். இவ்வள்ளல்கள் ஈகையாகிய செந்நுகத்தைப் பூண்டு தமிழுலகத்தைத் தாங்கினரென இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுவர். இந்நள்ளி கண்டீரக் கோவென்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி யென்றும் கூறப்படுவன். இளங்கண்டீரக் கோவும் உண்மையின், இவன் பெருநள்ளி யெனப்பட்டான். பெருமை இவற்கே சிறப்புரிமையாதல் தோன்றப் பெருங் கண்டீரக் கோவென்னாது பெருநள்ளியெனச் சான்றோர் கூறினர். இவன் அருள் நிறைந்த வுள்ளமுடையனாய் இரவலர் வறுமைத் துயர் போக்கும் வீரனாய் விளங்கினமையின், இவனைச் சான்றோர் பெரிதும் பேணிப் பாராட்டினர். தோட்டி யென்னும் மலையைத் தன்னகத்தேயுடைய நாடு கண்டீர நாடாகும். இவனது இக் கண்டீர நாடு மலை நாடாதலின், இவனை நளிமலை நாடன் நள்ளியென்று பாராட்டுவர்.இவனது கொடைநலத்தைப் பெரிதும் நுகர்ந்தவர் வன்பரணரென்னும் சான்றோராவர். ஆசிரியர் பரணரின் வேறு படுத்தறிதற்கு இவரது வன்பரணரென்னும் பெயரே நன்கமைந்திருக்கிறது. இவர் நள்ளியையே யன்றி ஓரி யென்னும் வள்ளலையும் பாடியுள்ளார். இவருக்குப் பிற்காலத்தவரான பெருஞ்சித்திரனார், இவனை, ஆர்வமுற்று, உள்ளி வருநர் உலைவு நனிதீரத், தள்ளா தீயுந் தகைசால் வண்மைக், கொள்ளா ரோட்டிய நள்ளி(புறம்.158) என்று சிறப்பித்துள்ளார்.
இனி, இப்பாட்டின்கண், வன்பரணர் நள்ளியை யடைந்து அவனது விறலையும் கொடையையும் பாராட்ட, அவன் சான்றீர், நீவிர் கூறும் நலம் பலவும் என்பால் உளவோ என ஐயுறுகின்றேனென்ற குறிப்புப்படச் சில நல்லுரை வழங்கினனாக, பீடில்லாத வேந்தரை அவர் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய் புனைந் துரைத்தற் கேதுவாகும் வறுமை நின் கொடையால் எம்பால் இல்லையாதலின், எமது நாக்கு ஒருவரையும் அவர் செய்யாதன கூறிப் பாராட்டற்கு அறியாதுஎன்று அவற்கு விடையிறுத்துள்ளார். | கறங்குமிசை யருவிப் பிறங்குமலை நள்ளிநின் அசைவி னோன்றா ணசைவள னேத்தி நாடொறு நன்கலங் களிற்றொடு கொணர்ந்து கூடுவிளங்கு வியனகர்ப் பரிசின்முற் றளிப்பப் | 5 | பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் |
|