| பாணனாகிய எனக்கீவோர், முத்தமிழின் ஒரு பகுதியாகிய இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஈவோராவர் என்பதனை யுணர்வோர் என்னை வறுமைத் துயர் வருத்தவிடார்என்று பாணன் கூறுகின்றா னென்பார், உணர்வோர் யாரென் இடும்பை தீர்க்கென நயத்திற் கிளக்கும் பாணஎன்றார். சீர்த்த சிலவாய சொற்களால் கேட்போர் உளங்கொள்ளத் தக்க வகையில் இனிது கூறுதல் நயத்திற் கிளத்தல்என்றார். நெருஞ்சிப்பூ ஞாயிற்றை நோக்கி நிற்குமென்பதை, வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி(அகம்.336) என்று பிறரும் கூறுப. சுடரென்ற விடத்து ஐயுருபு தொக்கதனால் தோற்றம் வேண்டாத் தொகுதியாயிற்று. இத்தொகைக்கண், சாரியை (தொல்.எழுத்து. புணரி.30) வேண்டு மென்றலின், இன் சாரியை வந்தது. ஐயுருபு தொக்கதற்கு அமைதி கூறலுற்று ஐகாரம் விகாரத்தால் தொக்க தெனினு மமையும் என்றார். தண்டாரகலம் நோக்குமிடத்து அதன் அகலமும் வலியும் தாளாண்மையாற் பொருளீட்டும் குறிப்பை வற்புறுத்தலின், அகலம் நோக்கி மண்டை மலர்ந்த தென்றார். உரைகாரரும் மண்டை......கொள்கஎன்றார்.
156. கொண்கானங் கிழான்
கொண்கானங் கிழானது விருந்துண்டு மகிழ்ந்திருக்கும் மோசி கீரனார் அவனது கொண்கான மலையைக் கண்டு பாடக் கருதினார். பாடுமிடத்து அக் கொண்கானத்துக் கிழானையும் பாட நினைந்து, அவனுடைய கொடைச் சிறப்பையும் வென்றிச் சிறப்பையும் பொருளாக நிறுத்தி, இக் கொண்கானம் பிறர் குன்றம்போலாது இரண்டு நலங்களையுடைத்து; ஒன்று இரப்போருடைய கடன்காரர்களால் வளைப்புண்டிருக்கும்; மற்றொன்று கொண்கானங் கிழானுக்குத் திறை செலுத்தி மீளும் சிற்றரசர்களால் சூழப்பட்டிருக்கும்என்று பாடியுள்ளார்.
| ஒன்றுநன் குடைய பிறர்குன்ற மென்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம் நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கு மஃதான்று | 5 | நிறையருந் தானை வேந்தரைத் | | திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே.(156) |
திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை: பிறர் குன்றம் - பிறருடைய மலைகள்; நன்கு ஒன்று உடைய வண்மையாதல் - வலியாதல் நன்மையொன்று உடைய; இரண்டு நன்கு உடைத்து கொண்பெருங் கானம் - எந்நாளும் இரண்டுநன்மையை யுடைத்துக் கொண்கான மென்னு மலை; அது-; நச்சிச் சென்ற இரவலர் சுட்டி - தன்பால் பரிசில் நச்சிப் போன இரப்போர் காரணமாக; தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் - தான் அவர்க்கு முன்பு கடன் கொடுத்தோராலே வளைப்புண்ணப்பட்டுக் கிடப்பினும் கிடக்கும்; |