155. கொண்கானங் கிழான்
கொண்கானங் கிழானது வண்மைநலத்தைப் பெற்று இன்புற்ற மோசிகீரனார் இப் பாட்டின்கண் அவன் பாணர் கூட்டத்துக்கு வேண்டுவன நிரம்ப நல்கி அவரது வறுமையைப் போக்கி யாதரிக்கும் சிறப்பினைப் பாணாற்றுப்படை வாயிலாக வற்புறுத்துகின்றார்.
| வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண கேளினி நயத்திற் பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ | 5 | ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங் | | கிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின மலர்ந்தே. (155) |
திணை: அது. துறை: பாணாற்றுப்படை. அவனை அவர் பாடியது.
உரை: வாணர் கோட்டுச் சீறி யாழ் வாடு புடைத்த தழீஇ - வளைந்த கோட்டையுடைய சிறிய யாழை உலர்ந்த மருங்கிலே தழுவிக்கொண்டு; உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என - அறிவோர் யார்தாம் எனது துன்பத்தைத் தீர்க்க வென்று; நயத்தின் கிளக்கும் பாண - நயத்திற் சொல்லும் பாண; இனி கேள் - யான் சொல்லுகின்றதனை இப்பொழுது கேட்பாயாக; பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ - பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தை யுடைய வாலிய பூ; ஏர் தரு சுடரின் எதிர் கொண் டாஅங்கு - எழுகின்ற ஞாயிற்றை எதிர்கொண்டாற் போல; இலம்படு புலவர் மண்டை - வறுமையுற்ற யாழ்ப் புலவரது ஏற்கும் மண்டை; விளங்கு புகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் - விளங்கிய புகழையுடைய கொண்கானங் கிழானது; தண் தார் அகலம் மலர்ந்து நோக்கின - குளிர்ந்த தாரையுடைய மார்பத்தை மலர்ந்து நோக்கின எ-று.
ஏர் தரு சுடரி னெதிர்கொண்டாங் கென்புழி, இன், சாரியை; அது தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது; அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்க தெனினு மமையும். நயத்திற் கிளக்கும் பாண வென வியையும்; நயத்தின் அகலம் நோக்கின வென இயைப்பினு மமையும்.
மண்டை அகலம் நோக்கி மலர்ந்த வென்ற கருத்து, கொடுக்கும் பொருள் மார்பின் வலியால் உளதாமாகலின், அகல நோக்கின வென்றதாகக் கொள்க.
விளக்கம்: வணர் - வளைவு. வாடு புடை - வறுமையால் வாடிய இடை; இதனை உலர்ந்த மருங்கென்றார் உரைகாரர். |