| நும்மோர்க்குத் தகுவன வல்ல - நும்மான் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுவனவல்ல; எம்மோன் - எம்முடைய தலைவன்; சிலை செல மலர்ந்த மார்பின் - வில்லைப் பூரணமாக வலித்தலான் அகன்ற மார்பினையும்; கொலை வேல் - கொல்லும் வேலினையும்; கோடல் கண்ணிக் குறவர் பெருமான் - காந்தட் பூவாற் செய்த கண்ணியினையுமுடைய குறவர்க்குத் தலைமகன்; ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை - இயங்குகின்ற முகிலைத் தனது உயரத்தால் தடுக்கும் பயன் பொருந்திய மலையினது உச்சிக்கண்; எற்படு பொழுதின் - ஞாயிறு படுகின்ற காலத்தில்; இனம் தலை மயங்கிக் கட்சி காணாக் கடம் - இனத்தினின்றும் தலை மயங்கித் தான் சேரும் சேக்கையைக் காணாத காட்டின்கண்; மான் நல் லேறு மடமான் நாகு பிணை பயிரின் - மானினது நல்ல கலை மடப்பத்தினையுடைய மானாகிய இளம் பிணையைப் பயிரான் அழைப்பின்; விடர் முழை இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் - அவ்வோைசையை விடராகிய முழையின்கண் கிடக்கின்ற பெரும் புலியாகிய புகர் நிறத்தினையுடைய ஏறு செவி தாழ்த்துக் கேட்கும்; பெருங்கல் நாடன் எம் ஏறைக்குத் தகும் - பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குப் பொருந்தும் எ-று.
சிலை செல மலர்ந்த மார்பு என்பதற்கு மலை தோற்க மலர்ந்த மார்பெனினு மமையும். தலைமயங்கி யென்பதனுள், தலை: அசைநிலை.
விளக்கம்: குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லையென்றும், அன்பெனப் படுவது தன்கிளை செறாமை(கலி.133) என்றும் சான்றோர் கூறுதலின், தமர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பது சீரிய பண்பாயிற்று. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற், கேளாது நட்டார் செயின்(குறள்.804) என்று திருவள்ளுவனாரும் கூறுவர். பிறர் வறுமை கண்டவழி, அதனை முன்பே கண்டு தீர்க்காமை தமது குற்றமாகக் கருதி நாணுதல் சான்றோர்க் கியல்பதலின், பிறர் கையறவுதான் நாணுதல்என்றார். அறிவு ஆண்மை பொருள் படைகளால் சிறந்தார்க் கல்லது வேந்துடையவையின்கண் பெருமிதற் தோன்றாதாகையால், வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலை விதந்தோதினார். எம்மை யுடையோன் என்பது எம்மோன் என நின்று தலைவற்காயிற்று. விற்பயிற்சியால் மார்பகலுதலும், அதன் அகலம் வலிய வில்லை நன்கு வளைத்தற்கு ஏதுவாதலும் கண்டு, சிலைசெல மலர்ந்த மார்புஎன்றார். தன்னாட்டுமலை நீர் சுமந் தேகும் முகிலைத் தடுத்துத் தன்பால் நீரைப் பெய்வித்துக்கொள்ள, தான், தனக்கஞ்சி வாழும் பகைவேந்தர் பிறர் துணை வேண்டி முயல்வதனைக் குறிக்கொண்டு நோக்கும் நாடும் காவற்சிறப்பும் ஏறைக்கோனுக் குண்டென்பதை உள்ளுறுத் துரைத்தார். |