பக்கம் எண் :

343

 

மதியங் காட்டியும் - அம்புலியைக் காட்டியும்; நொந்தன ளாகி -
அவற்றால் தணிக்க அருமையின் வருந்தினளாய்; நுந்தையை
உள்ளிப் பொடிந்த நின் செவ்வி காட்டு என - நின் பிதாவை
நினைந்து வெறுத்தநின் செவ்வியைக் காட்டெனச் சொல்லி;
வினவலானாளாகிப் பலவும் நனவின் அல்லல் உழப்போள் -
கேட்டல் அமயாளாய் மிகுதிப்பட நனவின் கண்ணும் துயர
முறுவோள்; மல்லல் சிறப்ப - வளப்பம் மிக; செல்லாச் செல்வம்
மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவல் - தொலையாத செல்வத்தை
மிகுத்தனையாய் விரையப் பரிசில் தந்து விடுத்தலை விரும்புவேன்
யான்; படு திரை நீர் சூழ நிலவரை உயர ஒலிக்குந் திரையையுடைய
நீராற் சூழப்பட்ட நிலவெல்லையிலே ஓங்க; நின் சீர் கெழு விழுப்
புகழ் பல ஏத்துகம் -நினது சீர்மை பொருந்திய சிறந்த புகழைப்
பலவாக வாழ்த்துவேம் எ-று.

     அத்தை: அசைநிலை. நன்கலம் இரீஇ அடிசிலைக் குடர் குளிப்பத்
தண்ணென ஊட்டி யென்க. ஊட்டி யென்க. ஊட்டி யென ஒருசொல்
தரப்பட்டது. “நட்டோர் நட்ட”வென்பதற்கு நட்டோரை நாட்டிய வெனினு
மமையும். “சொல்லாச் செல்வ மீத்தனை”யென்பதூஉம், “நிலவரை யுணர”
என்பதூஉம் பாடம்.

     விளக்கம்: “கருவி வானம் தலைஇ யாங்கும்”(புறம்.159) என்றும்,
இப்பாட்டில் “கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்கு”என்றும்
மழை முகிலை யுவமம் கூறினார். மேகம் கடற்குச் சேறலும் நீர் பருகுதலும்,
கொணர்ந்து வெம்பிய கானம் குழைப்பப் பெய்வதும் அதற்குக் கடன்
என்றும், காரெதிர் கானத்துக்கு அந்நீரை யுண்டு தழைத்தல் முறை யென்றும்
காட்டி அவ்வாறே, பொருள்வினைவயிற் பிரிந்து சேறலும், பொருள்
கொணர்ந் தீட்டலும், வறுமையால் வாடுவார் தழைப்ப வழங்கலும் கடன்
என்றும், இரவலர் அக் கொடையேற்று இயலும் இசையும் கூத்துமாகிய
தமிழ் தழைப்ப வாழ்தல் முறையென்றும் சுட்டியவாறாம். புலவரால் இயலும்,
பாணரால் இசையும், கூத்தரால் கூத்தும் தழைப்பனவாம். குமணன் தன்னைப்
பேணும் நலத்தை நேரிற் கூறலாகாமையின், பிற சான்றோர்
தமக்குரைத்தவாறே அவர் கூற்றைக் கொண்டு கூறுவார் போல விரித்துக்
கூறி, அதுவே ஏதுவாகத் தாம் வந்த வரலாறு கூறினார். பின்பு விடைபெறக்
கருதுகின்றாராதலின், மனைவியின் துன்பநிலைகூறி “வல்லே விடுத்தல்
வேண்டும்”என்று வேண்டினார். தம் புதல்வன் பசையற்றுத் திரிதற்கு ஏது
கூறுவார், “இல் உணாத் துறத்தலின் இல் மறந்து”உறைகின்றான் என்றார்.
இளஞ்சிறார் அழுகையை மறப்புலி காட்டல் முதலியவற்றால் தீர்க்குமாறு
கூறினார். கனவில் வருந்தும் வருத்தம் அறியவாராமையின், “நனவின்
அல்லலுழப்போள்”என்றார்.