| விளக்கம்: கார்காலத்து இமயத்திற் பெய்த மழைநீர் பனியாய் உறைந்திருந்து கோடையில் உருகிக் கங்கையிற் பெருகி வரு மென்ப; அதனால் தாளாண்மையாலும் போராண்மையாலும் ஈட்டப்பெற்றிருந்த குமணன் செல்வம் பரிசிலர்க்கு வறுமைக் காலத்திற் பயன்படுதலின், கங்கை யாற்றை யுவமித்து, கங்கை நீர் நிறைந்து தோன்றியாங்கு எமக்கும் பிறர்க்கும் செம்மலையென்றார். இனி, தன் மனைக்கண் இருக்கும் மனைவி தன்னை நினைந்து துன்புறுந் திறத்தை யெடுத்தோது வாராய், சுரத் தருமையை அன்பில் ஆடவர் கொன்றாறு கவரகடை போகச் சென்று முடியும் இயல்பிற்றன்று என்றும், அச் சுரத்தின்கண் நெடிது சென்றவர்க்குக் கேடுண்டாமென அஞ்சும் திறத்தை, இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர வெனினைந்து உரன் அழிந்து, அருந்துய ருழக்கும் பெருந் துன்புறுவியென்றும், சிறிது கொடுத்து எள்ளிய இளவெளிமான் கண்டு நாணச் செல்லவேண்டுமென்ற வேட்கையால், என்றும் வேந்தர் நாணப் பெயர்வேன்என்றும், குமணன் செய்த போர்களால் விளைந்த நலத்தால் அவன் தாணிழல் வாழ்வாரும் நன்கலம் இரவலர்க்களிக்கும் பெரும்புகழ் பெற்றனரென்றும் கூறி, அவனுடைய தானையையும் செல்வத்தையும் பாராட்டியுள்ளார்.
162. இளவெளிமான்
வெளிமான் என்பான் ஒரு கொடை வள்ளல்; தன்பால் வரும் பரிசிலர் வரிசை யறிந்து வேண்டுவன நல்கும் வீறுடையவன். ஒருகால், வறுமைத் துயரால் வாட்டமுற்ற பெருஞ்சித்திரனார் இவ் வெளிமான்பால் சென்றார். இவர்க்கு வேண்டுவன நல்க விழைந்தானாயினும், தான் துஞ்சும் நிலையில் இருந்தமையின், தன் தம்பியாகிய இளவெளிமானை யழைத்து இவர்க்கு வேண்டுவன நல்குகஎன்றான். இளவெளிமான் வெளிமானைப்போல அத்துணை விரிந்த மனப்பண்பும், புலவர் வரிசையறியும் நல்லறிவும் உடையவ னல்லன். அதனால் அவன் வெளிமான் குறித்த அளவில் மிகவும் குறைத்துக் கொடுத்தான். அதனை ஏற்றற்குப் பெருஞ்சித்திரனார் விரும்பிற்றிலர். அவர் கொல்களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசிலர் கொள்வ திலர்; உவந்து இன்புற விடுப்பின் குன்றியும் கொள்ளும் இயல்பினர். அதனால் அவர் இளவெளிமான் தந்ததை ஏலாது பாடிய பாட்டு எழுவினி (புறம்.207) எனத் தொடங்கும் புறப்பாட்டு. பெரிதே யுலகம் பேணுநர் பலரேஎனக் குமணன் பால் சென்று பகடு பெற்று அதன்மேல் ஏறிச் செம்மாந்துபோந்தார். போந்தவர் நேரே தம்மூர்க்குச் செல்லாது வெளிமானூர்க்கு வந்தார். அப் பகட்டினை வெளிமானூர்க் காவல் மரத்திற் கட்டிவிட்டு நேரே சென்று இளவெளிமானைக் கண்டார். வேந்தர் நாணப் பெயர்வேன்என்று குமணன்பால் கூறிப் போந்தவாறே இவ் விளவெளிமான் நாணுமாறு நீ இரவலர் பலரையும் புரப்பவன் அல்லை; இரவலரைப் புரப்பார் இல்லாமலும் இல்லை. இரவலர் உண்மையும், புரவலர் உண்மையும் என்னையும் வள்ளல் குமணனையும் பார்த்து அறிந்துகொள்க. குமணன் எனக்குத் தந்த யானைப் பரிசிலைக் காண்பாயாக; அவ் யானையை நின் ஊர்க் கடிமரத்திற் பிணித்துள்ளேன்என்று இப் பாட்டாற் கூறிக் காட்டுகின்றார்.
|