| | இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் | 5 | கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த | | நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வம் யானே. (162) |
திணை: அது. துறை: பரிசில் விடை. அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமானூர்க் கடிமரத்து யாத்துச் சென்று அவர் சொல்லியது.
உரை: இரவலர் புரவலை நீயும் அல்லை - இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயு மல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் - புரப்போர் இரப்போர்க்கு இல்லையுமல்லர்; இனி இரவலர் உண்மையுங் காண் - இனி இரப்போருண்டாதலையும் காண்பாயாக; இனி இரவலர்க்கு ஈவோ ருண்மையும் காண் - இனி இரப்போர்க்கு இடுவோ ருண்டாதலையும் காண்பாயாக; நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து - நின்னுடைய ஊரின்கண் காவலையுடைய மரம் வருந்தக் கொடுவந்து; யாம் பிணித்த நெடு நல்யானை எம் பரிசில் - யாம் கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்; கடு மான் தோன்றல் - விரைந்த செலவினையுடைய குதிரையையுடைய தலைவனே; யான் செல்வல் - இனி யான் போவல் எ-று.
யான் போவல் என்ற கருத்து, முன் சிறிது கொடுப்பக் கொள்ளாத மிகுதி தோன்ற நின்றது. இரவல ருண்மையுங் காணினி யென்ற கருத்து, இரப்போர்க்குப் பெருந்தன்மை யுளதாதல் என்னளவிலே காண் என்பதாம். யாம் பிணித்தஎன்னும் பன்மை பெருமிதந்தோன்ற நின்றது. நடைவயிற் றோன்றும் இருவகை விடையும்(தொல். புறத்.36) என்பதனால் இது பெறாது பெயர்ந்த பரிசில் விடை.
விளக்கம்: இளவெளிமான் சிறிது கொடுத்தது, இரப்பவர் என்பெறினும் கொள்வரென்றும், சிறிது கொடுப்பினும் கொடாது மறுப்பினும் தன்னையே மீளப் போந்தடைவர் என்றும் கருதிய கருத்தைப் புலப்படுத்தினமையின், இரவலர் புரவலை நீயு மல்லையென்றும், புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்என்றும் கூறினார். குமணன் தந்த யானைப் பரிசிலை வெளிமானூர்க்கடிமரத்திற் பிணித்திருத்தலின், நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானையென்றும், இதுபோலும் பெருஞ் செல்வத்தை நல்கும் புரவலரும், பெறும் என்போலும் இரவலரும் உளரெனக் காட்டுவதே கருத்தாகலின், யான் செல்வல்என்றும் பெருமிதம் படக் கூறினார்.
|