பக்கம் எண் :

350

 

திருந்து வேல் குமணன் நல்கிய வளன் - திருந்திய வேலையுடைய
குமணன் நல்கிய செல்வத்தை எ-று.

    மனை கிழவோய், குமணன் நல்கிய செல்வத்தை நீயும் எல்லோர்க்கும்
கொடுமதி  யெனக்   கூட்டுக.  நின்   பன்  மாண்  கற்பின்   கிளை
முதலோர்க்குமென விளையும்; நின்றாங் குரைப்பினு மமையும். நீயு மென்ற
உம்மையானும் கொடுப்பேன், நீயுங் கொடு வென எச்ச உம்மையாய் நின்றது.

    விளக்கம்: கிளை முதலோர் என்றது, சுற்றத்தோரில் மூத்த மகளிர்,
குறி யெதிர்ப்பை - யாம் இப்போது நல்கின் அப்போது நமக்கு நல்குவர்
என்று கருதி வழங்கும் கடன். பொருளைப் பெற்றுப் போந்த முதன்மை
தன்பாலிருத்தலின், “என்னொடும் சூழாது”என்றும், பொருளுளதாய
காலத்துச் சிறிது பற்றுள்ளங்கொண்டு வாழின் வறுமைத்துயர்க் கிடமிராது
என்று கருதற்க வென்பார், “வல்லாங்கு வாழ்து மென்னாது”என்றும், இச்
செல்வம் குமணன் தந்தது; தன் செல்வத்தில் அவனே பற்றுள்ளம்
கொள்ளாதபோது, நாம் பற்றுவைத்தற்குரிமையில்லையாகலின், இச்
செல்வத்தைக் காணுந்தோறும் அவனை நினைந்து வாழ்த்துவதல்லது
செய்வதுபிறிதில்லை யென்பார், “திருந்து வேல் குமணன் நல்கிய வளன்”
என்றும் கூறினார்.

                         164. குமணன்

     தம்பியாகிய இளங்குமணன் தம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு
தன்னையும் கோறற்குச் சூழ்ந்ததறிந்து குமணன், நாட்டின் நீங்கிக்
காட்டையடைந்து வாழ்ந்து வந்தான். அக்காலத்தே பெருந்தலைச் சாத்தனார்
வறுமையுற்று,  அவன்பாற்   பரிசில்   பெற  முதிரத்துக்கு வந்தார்; வந்தவர்,
நாட்டில்  நிகழ்ந்திருக்கும்   செய்தி   யறிந்து   ஏமாற்ற மடைந்தாராயினும்,
இளங்குமணன் மனவன்மை யில்லாதவன் என்பதைச் சூழ்ந்தறிந்து
உடன்பிறந்தார் இருவர்க்கிடையே நிலவிய பகைமையைப் போக்கி
ஒற்றுமையுளதாக்குதற்கு முயல்வாராயினர். வேறு நெறி யொன்றும்
புலப்படாமையால் காட்டில் குமணன் இருக்குமிடத்தை யறிந்து அவன்பாற்
சென்று சேர்ந்தார். ஆங்கே அவர்க்குத் தம் கருத்தைப் புலப்படாமையால்
காட்டில் குமணன் இருக்கு மிடத்தை யறிந்து அவன்பாற் சென்று சேர்ந்தார்.
ஆங்கே அவர்க்குத் தம் கருத்தைப் புலப்படுத்தாது தம்பால்நின்று வருத்தும்
வறுமைத் துன்பத்தை யெடுத்துக் குமணற்கு விளங்க வோதி, “வேந்தே, நீ
வயிரியர் வறுமை தீர்க்கும் குடிப்பிறந்தவன்; வறுமையுற்று வாடும் என்
மனையாள் துன்பத்தைக் காணமாட்டேனாய் நின்னை நினைந்து போந்தேன்;
என் நிலை இதுவாகும்; இந்நிலையில் யான் நின்னை வளைத்துக் கொண்டு
ஏதேனும் பரிசில்பெற் றல்லது மீளேன்”என இப்பாட்டின் கட்
குறித்துரைக்கின்றார்.

 ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி