பக்கம் எண் :

361

 

168. பிட்டங்கொற்றன்

     பிட்டங்கொற்ற னென்பான் சேரமான் கோதைக்குப் படைத்
துணைவன்;பேராண்மையும்  கைவண்மையும்   ஒருங்குடையவன்;  
சான்றோர்   பலரும் பாராட்டும் தகுதி பெற்றவன். இவன் குதிரை
மலையைச் சார்ந்த நாட்டை யுடையவன்.   வேங்கைப் பூவால்  தொடுத்த
கண்ணி    இவற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்துக்  காரிக்கண்ணனார்
இவன்பால்    மிக்க ஈடுபாடுடையராவர். போருடற்றிப் பெற்ற செல்வ
முழுதும் இவன் இரவலர்க் கீத்துப்  புகழ்  வளர்த்தலிலேயே
பயன்படுத்தினான்.  இவ்வாறிருக்கையில், கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா
ரென்பார், தமிழக முழுதும் உள்ள பரிசிலர் பலரும் இப் பிட்டங்கொற்றன்
புகழைப் பெரிதெடுத்துப்  பேசுவது கேட்டுப் பிறரை வினவினார்;
அவர்களும் “சான்றோர்  பலரும் பிட்டங்கொற்றனைப் பாடுவதில்
பெருவிருப்புடையர்”என்றனர். அவர்க்கு  இக் கொற்றனைக் காண்டலில்
விருப்பமுண்டாக,   விரைந்து   சென்று  கண்டு   இப்பாட்டைப்
பாடினார். இதன்கண் அவர், குதிரைமலைக் குறவர் விருந்தோம்புந் திறத்தை
விரித்தோதி, “வில்லோர் பெரும, கொற்ற, இத் தமிழகத்தில் ஈயா மன்னர்
கேட்டு நாணுமாறு, பரிசிலர் பலரும் நின் புகழையே பாடுவர் என்று
சான்றோர் கூறுகின்றனர்”என்று குறித்துள்ளார்.

     கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பெயர், கருவூர்க் கந்தப்பிள்ளை
சாத்தனாரென்றும் காணப்படுகிறது. இவர் சேர வேந்தர்பால் மிக்க
அன்புடையவர்; அவரது ஈகைச் சிறப்பை அகப்பாட்டொன்றில் “காடு மிக
நெடிய வென்னார் கோடியர், பெரும்படைக் குதிரை நற்போர் வானவன்,
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு”(அகம். 309) என்று
சிறப்பித்துள்ளார். இவ்வியைபால் சேரர் படைத்துணைவனாகிய
பிட்டங்கொற்றனை இவ்வாறு இப்பாட்டில் பாராட்டியுள்ளார்.

 அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
5 நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
 உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
10வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
 சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊரலக் குதிரைக் கிழவ கூர்வேல்
15 நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி