பக்கம் எண் :

363

 

வில்லோரபெரும - வில்லாட்களுக்குத் தலைவ;  கைவள் ஈகைக்
கடுமான் கொற்ற - கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும்
கடியகுதிரையையுமுடைய  கொற்ற;  வையக  வரைப்பில்   தமிழகம்
கேட்ப - உலகத் தெல்லையுள் தமிழ்நாடு கேட்க; பொய்யாச் செந்நா
நெளிய ஏத்தி - பொய்யாத  செவ்விய  நா வருந்தும்படி வாழ்த்தி;
நாளும் பாடுப என்ப பரிசிலர் - நாடொறும் பாடுவரென்று
சொல்லுவர் பரிசிலர்; ஈயா  மன்னர் நாண - கொடாத  வேந்தர்
நாண;  வீயாது பரந்த நின் வசையில் வான் புகழ் - கெடாது பரந்த
நினது வசையில்லாத வாலிய புகழை எ-று.

     கிழவ, பெரும, கொற்ற, பரிசிலர், நின் புகழை யேத்திப்
பாடுபவென்ப; அதனால் யானும் நின்பாற் பரிசில் பெற்றுப் பாடு வேனாக
வேண்டுமெனப் பரிசிற்றுறைக் கேற்கக் கூறியதாக்குக. ஊராக்குதிரை,
மலைக்கு வெளிப்படை நறை, பச்சிலைக் கொடி,

     விளக்கம்: பன்றி   நிலத்தைக்  கிளறுமிடத்துக்  காந்தளினது
வெண்மையான கிழங்கு வெளிப்பட்டுத் திகழ்தல்பற்றி, “கிழங்கு மிளிரக்
கிண்டி”யென்றார். விதைத்தற்கும் விதைத்தவை முளைத்து  விளைந்தபின்
அவ்விளைவை யுண்டற்கும் நன்னாள் பார்ப்பது வழக்கமாதலின், “நன்னாள்
வருபதம் நோக்கி” யென்றும், “யாணர்நாள் புதி துண்மார்” என்றும்
கூறினார். விருந்தூட்டி யுண்ணும்   சிறப்புத்   தோன்ற “அகலிலையுண்ணு”
மென்னாது  “பகுக்கும்”  என்றார்.    உவித்தல்,  சமைத்தல்.   நறைக்
கொடியிலிருந்து நாரெடுத்துக் கண்ணி தொடுத்தலை, “நறைநார் வேங்கைக்
கண்ணியன்”(அகம்.282) எனச் சான்றோர் கூறுதலாலறிக.  “அதனால்
யானும்  நின்பாற்  பரிசில் பெற்றுப் பாடுவேனாகவேண்டு”மென்பது
குறிப்பெச்சம்.

                   169. பிட்டங்கொற்றன்

      ஆசிரியர்    காவிரிப்பூம்பட்டினத்துக்     காரிக்கண்ணனார்
பிட்டங்கொற்றனைக் காண விழைந்து அவன்  செவ்வி   காண முயன்றார்.
முயலுந்தோறும் அவன் போரில் ஈடுபட்டுப் படையகத்திருந்ததனால் அவனது
செவ்வி யரிதாயிற்று. ஒருகால் அவன் செவ்வி கிடைத்தது. அவன் உடனே
போருக்குச் செல்லவேண்டிய கடமையு மிருந்தது. கிடைத்த செவ்விக்கண்ணே
தாம் பரிசில் பெற்றுச் செல்லவேண்டி இப்பாட்டின்கண் “பெரும, நும்முடைய
படை பகைமேற் செல்லும் போது நீ அதன் முன்னே நிற்கின்றனை;
பகைவர் நும்மேல் செல்லும்  போது   நீ   அதன்  முன்னே நிற்கின்றனை;
பகைவர் நும்மேல்  வருங்கால், நுமது  கூழைப் படையைத்  தாங்கி
ஆற்றிடைக் குறுக்கே  நிற்கும்  கற்சிறைபோல் நிற்கின்றனை; இந்நிலையால்
யான் வருந்தோறும் நின் செவ்வி கிடைப்பதரிதாயிற்று. என் சுற்றத்தார் எய்தி
வருந்தும் இடும்பையோ பெரிதாயிற்று. ஆதலால், இன்னே எனக்குப் பரிசில்
தந்து விடைதர வேண்டுகின்றேன்; பொருநரால் தொலைக்க முடியாத நின்
வென்றி விளங்குவதாக”என்று விளம்புகின்றார்.