பக்கம் எண் :

367

 

வந்தோர்க்கு மெல்லியனா யிருத்தலல்லது; பகைவர்க்கு-; இரும்பு
பயன்    படுக்கும்    கருங்கைக்     கொல்லன் - இரும்பைப்
பயன்படுத்துகின்ற வலிய கையையுடைய கொல்லன்; விசைத் தெறி
கூடமொடு பொரூஉம் - விசைத் தடிக்கப்பட்ட கூடத்தோடே யேற்று
மாறுபடும்; உலைக் கல் அன்ன - உலையிடத்து அடைகல் போலும்;
வல்லாளன் - வலிய ஆண்மையை யுடையன் எ-று.

     பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்குக் கல்லன்ன
வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுக லோம்புமின் எனக் கூட்டுக.
வலிதுரந் தென்பதற்கு மாற்றார் வலியைக் கெடுத் தெனினுமமையும். நார்
பிழிக் கொண்ட வென்பதற்கு, கோதைப் பிழிந்து கொண்ட வெனினுமமையும்.

     விளக்கம்: மரையா, காட்டுப்பசு; ஒருவகை விலங்கென்பர் உ.வே.
சாமிநாதையர். இது நெல்லிக்காயைத் தின்னுமிடத்து அதன் கொட்டையை
வெளியே துப்பி விடுதலால், “மரையா பிரித்துண்ட நெல்லிப் பரல்”என்றார்.
மனைகளில் நெல்லி மரங்கள் வேலியாக வைக்கப்பட்டுள்ளன. “நெல்லி,
மரையின மாரு முன்றில்”(குறுந். 235) என்று பிறரும் கூறுதல் காண்க.
வேட்டுவரை வில்லுழு  துண்மார்  என்றார்;  வில்லுடைய  மறவரைத்
திருவள்ளுவரும்    “வில்லே ருழவ”ரென்பர். எல்    அடிப்படுத்தல் -
இரவுப்போது முற்றும் வேட்டையாடித் திரிதல்.    துடி மிக்க வன்மையும்
கடிய வோசையு முடையதாகலின் இழி பிறப்பாளன் தன் வலி முழுதும்
செலுத்தி    முழக்குகின்றா  னென்றற்குக் “கருங்கை சிவப்ப, வலிதுரத்து
சிலைக்கும்.....துடி”யென்றார். துடி யொலியும் குடிஞையாகிய பேராந்தையின்
ஒலியும் ஒப்ப எதிரொலிக்கும் என்பார், “குடிஞையோ டிரட்டும்”என்றார்.
யானையின் கோடு மிகவும் முதிர்ந்தவழி அதன் நுனியில் முத்துண்டாமென்ப;
“முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற”(பதிற்.32) என்று சான்றோர் கூறுதல்
காண்க.     நார்     பிழிக்     கொண்ட    வெங்கள் - நாரால்  
வடிகட்டிக் கொள்ளப்பட்ட வெவ்விய கள். வெம்மை, வேண்டற்பொருட்டு.
விறலியர்க்கு முத்தும் பாணர்க்கு வெங்கட்டேறலும் கொடுக்கப்படுகின்றது.
நசைவர், பரிசில் நச்சிவரும் இரவலர். கருங்கை யென்ற விடத்துக் கருமை,
வன்மை உலை கல்,  பட்டடைக்   கல்.  “உலைக்கல்    லன்ன  
வல்லாளன்”எனப் பிட்டங்கொற்றனைக் கூறியது, பகைவரால் தாக்கிக்
கெடுக்க முடியாத அவனது மெய்வண்மை குறித்துநின்றது. நாரென்பதற்குக்
கோது எனப் பொருள்கொண்டு, நார் பிழிக் கொண்ட வென்பதற்குக்
கோதைப் பிழிந்து கொண்டென வுரை கூறினும் பொருந்து மென்றார்.