| உரை: இன்று செலினும் தரும் - இன்று போகினும் தருவன்; சிறு வரை நின்று செலினும் தரும் - சிறிதுநாட் கழித்துப் போகினும் தருவன்; பின்னும் முன்னே தந்தனென் என்னாது - பின்னையும் முன்னே தந்தே னென்னாது; துன்னி வைகலும் செலினும் - பயின்று நாடோறும் செல்லினும்; பொய்யலனாகி - பொய்யானாகி; யாம் வேண்டினபடியே எம்முடைய வறிய கலத்தை நிரப்புவோன்; தான் வேண்டியாங்கு - தான் விரும்பினபடியே தன் இறை உவப்ப - தன்னுடைய அரசன் உவப்ப; அருந்தொழில் முடியரோ - செய்தற்கரிய போர்த் தொழில்களை முடிப்பானாக; திருந்து வேல் கொற்றன் - திருந்திய வேலையுடைய கொற்றன்; இனமலி கதச்சே களனொடு வேண்டினும் - இனமாகிய மிக்க வெவ்விய சேக்களைத் தொழுவோடே வேண்டினும்; களமலி நெல்லின் குப்பை வேண்டினும் - களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையை வேண்டினும்; அருங் கலம் களிற்றொடு வேண்டினும் - பெறுதற்கரிய அணிகலங்களைக் களிற்றுடனே வேண்டினும்; பெருந் தகை - பெரிய தகைமையை யுடையான்; பிறர்க்கும் அன்ன அறத் தகையன் - பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் கூற்றையுடையான்; அன்னன் ஆதலின் - அத்தன்மையனாதலால்; எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்கதில் - எம்முடைய இறைவனது உள்ளடிக்கண் முள்ளும் உளப்பட நோவச் சென்று உறா தொழியவேண்டும்; ஈவோர் அரிய இவ்வுலகத்து - ஈவோர் அரிதாகிய இவ் வுலகத்தின்கண்; வாழ்வோர் வாழ - உயிர் வாழ்வோர் வாழும் பரிசு; அவன் தாள் வாழிய - அவனது தாள் வாழ்வதாக எ-று.
பிறர்க்கும் என்பது எச்சம். தில்: விழைவின்கண் வந்தது, திருந்துவேற்கொற்றன், பெருந்தகை, சேக்களனொடு வேண்டினும் நெல்லின் குப்பை வேண்டினும், அருங் கலம் களிற்றொடு வேண்டினும், நமக்கே யன்றிப் பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் தகுதியை யுடையன்; யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; தான் வேண்டியாங்குத் தன் இறை யுவப்ப, அருந்தொழில் முடிப்பானாக வேண்டுவது; எந்தை உள்ளடி முள்ளும் நோவ வுறாற்க; வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவெனக் கூட்டுக. வாழ்வோர் வாழ்வு என்றோதி, வாழ்வோர் வாழும் வாழ்வெல்லாம் அவன் தாள் வாழ்க வென் றுரைப்பினு மமையும். தாளை முயற்சி யெனினுமமையும்.
விளக்கம்: துன்னியிருந்து வைகலும் சென்றாலும் பொய்த்தல் இலன் என்றவிடத்து துன்னுதல் பயிலுதல் குறித்து நின்றது. பலகாலும் பயின்றார்க் கன்றித் துன்னியிருத்தல் அமையா தென்க. யாம் வேண்டுமாறே எமக்கு அளிப்பன், தான் வேண்டியவாறே தான் மேற்கொள்ளும் அரிய தொழில்களைச் செய்தல் வேண்டும் என்றும், அவ்வருந்தொழில் அவன் வேந்தர்க்கும் உவப்பினை யளித்தல் வேண்டுமென்றும் கூறினார். |