பக்கம் எண் :

370

 

அருந்தொழில்  முடித்தலின்   பயன்  அவன் வேந்தனது உவப்பைப்
பெறுதலாதலின், “தன் இறை யுவப்ப”என்றார். இன்று இவன்பால் இருந்து
பலகாலும் பெறும் நமக்கே யன்றி, ஓரொருகாற் போந்து வேண்டும் பிற
பரிசிலர்க்கும் இவ்வண்ணமே நல்குவனென்றற்குப் “பிறர்க்கு மன்ன அறத்
தகையன்”என்றார். பிறர்க்கு மென்ற உம்மை நம்மையு மெனத் தழுவி
நிற்றலின், எச்சவும்மையாயிற்று. ஏர்க் களம் பாடுவோர்க்கு “இனமலி
கதச்சேக் களனொடு”தருதலும், நெல்லின் குப்பை தருதலும், போர்க்களம்
பாடுவோர்க்கு அருங் கலம் களிற்றொடு நல்குதலும் பற்றி, இவற்றைப்
பகுத்துக் கூறினார். அவனுக்குச்  சிறு  தீங்கும்  வரலாகாதென மிக்க
ஆர்வத்தோடு வாழ்த்துகின்றாராகலின், “எந்தை யுள்ளடி முள்ளும் நோவ
வுறாற்கதில்ல”  என்றார். செல்வர்  பலராகிய  வழியும்   ஈதன்
மனப்பான்மையுடையார் மிகச் சிலரே யாதலால், “ஈவோ ரரிய இவ்வுலகத்”
தென்றும், வாழ்வோர் இனிது உயிர் வாழ்வதற்கு இவனது தோளாண்மையும்
தாளாண்மையும் கரணும் ஆக்கமுமா மென்பார், “வாழ்வோர் வாழ அவன்
தாள் வாழியவே”என்றும் கூறினார். இனி, வாழ்வோர் வாழ்வெல்லாம்
இவன்  வாழ்க என உரைப்பினும் அமையு மென்றார்.

                       172. பிட்டங்கொற்றன்

     வடமவண்ணக்கன் தாமோதரனா ரென்னும் சான்றோர் ஒருகால்
பிட்டங்கொற்றனைக் கண்டு பாடி, அவன் தந்த பெருவளத்தால் இன்புற்றார்.
அக்காலை, தான் பெற்ற இன்பத்தைப் பாண னொருவன் தன் சுற்றத்தார்க்
குரைக்கும்       துறையில்    வைத்து    இப்பாட்டால்  
வெளிப்படுத்தியுள்ளார். பிட்டங்கொற்றன்பால் பரிசில் பெற்ற
பாணனொருவன், “உலையேற்றி நிரம்பச் சோற்றை  யாக்குக; மதுவையும்
நிறைய வுண்டாக்குக;     விறலியர்    சிறந்த  அணிகளை யணிந்து
கொள்க; இனி நாளைக்கு என்செய்வே மென வெண்ணியிரங்குதல்
வேண்டா;    இல்லையாயின்    பிட்டங்கொற்றன்     நமக்கு
வேண்டுவனவற்றை நிரம்ப நல்குவன்; நாம் செய்ய வேண்டுவதெல்லாம்
பிட்டங்கொற்றன் வாழ்க; அவன் தலைவனான சேரமான் கோதை வாழ்க;
இவரைப் பகைத்த மன்னர்களும் வாழ்கவென வேண்டுவதேயாம்”என்று
கூறுகின்றான்.

         இத் தாமோதரனார் வடநாட்டினின்றும் தமிழ்நாட்டிற் குடியேறிய
வடமர் குடியிற் றோன்றி வண்ணக்கர் தொழில் மேற்கொண்டிருந்தவர்.
செந்தமிழ்ப் புலமை நலமும் சிறந்து சீரிய செய்யுள் செய்த சிறப்பால்
சான்றோர் தொகையுள் ஒருவராயினார். தலைவர் புறத்தொழுக்கம்
மேற்கொண்டானாக, அவன்பொருட்டுச் சென்ற பாணன், தலைவியின்
தோழியை நோக்கி, “தலைவன் யாரினும் இனியன், பேரன்பினன்”என்று
சொல்லி வாயில் வேண்டி நிற்க. அவனை மறுக்கும் தோழி, “உள்ளூர்க்
குரீஇத் துள்ளுநடைச் சேவல், சூல்முதிர் பேடைக் கீனில் இழைஇயர்,
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின், நாறா வெண்பூக் கொழுதும்,
யாண ரூரன்”(குறுந் 85) என்னுமாற்றால், தலைவன் பரத்தைமையின்
சிறப்பின்மையை வற்புறுத்துவது இவரது புலமை நலத்தை விளக்கிக்
காட்டுகின்றது. இதன் நலங் கண்டு வியந்த மணிவாசகனார், “சூன்முதிர்
துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான், தேன்முதிர்
வேழத்தின் வெண்பூக்குதர் செம்மலூரன்”(திருக். 319) என்றும்,