| சேரமான் பெருமாள், மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி, ஈனிலிழைக்க வேண்டி யானா, அன்புபொறை கூர மேன் மேன் முயங்கிக் கண்ணுடைக் கரும்பி னுண்டோடு கவரும் (திருவாரூர் மும்மணிக்.19) என்றும் தத்தம் நூல்களில் மேற்கொண் டுரைத்திருப்பதே இத்தாமோதரனாரின் புலமை நலத்துக்குச் சான்று பகருகின்றது.
| ஏற்றுக வுலையே யாக்குக சோறே கள்ளுங் குறைபட லோம்புக வொள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக அன்னவை பிறவும் செய்க வென்னதூஉம் | 5 | பரியல் வேண்டா வருபத நாடி | | ஐவனங் காவலர் பெய்தீ நந்தின் ஒளிதிகழ் திருந்துமணி நளியிரு ளகற்றும் வன்புல நாடன் வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலு மவனிறை | 10 | மாவள் ளீகைக் கோதையும் | | மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே. (172) |
திணையும் துறையு மவை. அவனை வடமவண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
உரை: உலை ஏற்றுக - உலையை யேற்றுக; சோறு ஆக்குக - சோற்றை ஆக்குக; கள்ளும் குறை படல் ஓம்புக - மதுவையும் நிறைய வுண்டாக்குக; ஒள்ளிழை பாடுவர் விறலியர் கோதையும் புனைக - விளங்கிய அணிகலத்தையுடைய பாடுதல் வல்ல விறலியர் மாலையும் சூடுக; அன்னவை பிறவும் செய்க - அத்தன்மையன மற்றும் செய்க; என்னதூஉம் பரியல்வேண்டா - சிறிதும் இரங்குதல் வேண்டா; வருபதம் நாடி - மேல் வரக்கடவ வுணவை ஆராய்ந்து; ஐவனம் காவலர் பெய் தீ நந்தின் - ஐவன நெல்லைக் காப்பார் காவற்கிடப்பட்ட தீ அவ்விடத்துக் கெட்டகாலத்து; ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் - ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்; வன் புல நாடன் - வலிய நிலமாகிய மலைநாட்டை யுடையவன்; வய மான் பிட்டன் - வலிய குதிரையை யுடைய பிட்டன்; ஆரமர் கடக்கும் வேலும் - பொருதற்கரிய போரை வெல்லும் வேலும்; மாவள் ஈகைக் கோதையும் - அவன் தலைவனாகியபெரிய வள்ளிய கொடையையுடைய கோதையும்; மாறுகொள் மன்னரும்நெடிது வாழியர் அவனோடு பகைத்த வேந்தரும் நெடிது வாழ்க எ-று.
பிட்டன் வேலும், கோதையும், மாறு கொள் மன்னரும் நெடிது வாழியர்;அதுவே வேண்டுவது; மேல்வரும் உணவைத் தேடி என்னதூஉம் பரியல் வேண்டா; ஆதலால் ஏற்றுக; ஆக்குக; ஓம்புக; கோதையுயிம் புனைக; |