| கோடை நீடிய பைதறு காலை இருநில நெளிய வீண்டி உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே. (174) |
திணை: வாகை. துறை: அரசவாகை. மலையமான் சோழிய வேனாதி * திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார்பாடியது.
உரை: அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித் தென - பிறரை வருத்தும் அச்சத்தினையுடைய அசுரர் திரள் கொண்டுபோய் மறைத்தார்களாக; சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது - சேய்மைக்கண்ணே விளங்காநின்ற தலைமையினையுடைய ஞாயிற்றைக் காணாமையால்; இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - இருளானது உலகத்தாரது கண்ணை மறைத்த வட்டமாகிய உலகத்தினது; இடும்பை கொள் பருவரல் தீர - நோய் கொண்ட துன்பம் நீங்கும் பரிசு; கடுந் திறல் அஞ்சன உருவன் - மிக்க வலியை யுடைய அஞ்சனம்போலும் நிறத்தையுடைய திருமேனியையுடைய கண்ணன்; தந்து நிறுத் தாங்கு - அந்த ஞாயிற்றைக் கொண்டுவந்து இவ் வுலகத்தின்கண் அந்த காரம் நீங்கும் பரிசு ஆகாயத்தின்கண்ணே நிறுத்தினாற்போல; அரசிழந் திருந்த அல்லற்காலை - பகை வேந்தரோடு பொருது உடைந்து போதலால் தம் வேந்தனையிழந்துழலும் இன்னாமையையுடைய பொழுதின்கண்; முரசு எழுந் திரங்கும் முற்றமொடு - முரசு கிளர்ந்து முழங்கும் செண்டு வெளியையுடைய கோயிலுடனே; கரையைப் பொருது இரங்கு புனல் நெரி தரு மிகு பெருங் காவிரி - கரையைப் பொருது முழங்கும் நீராரே யுடைந்து ஆழ்ந்தோடுகின்ற மிக்க பெரிய காவிரியையுடைய; மல்லல் நன்னாட்டு அல்லல் தீர - வளவிய நல்ல நாட்டினது துயரம் கெட; பொய்யா நாவின் கபிலன் பாடிய - பொய்யாத நாவினையுடைய கபிலனாற் பாடப்பட்ட; மை யணி நெடுவரை ஆங்கண் - முகி லணிந்த பெரிய மலையிடத்து; ஒய்யென - விரைய; செருப்புகல் மறவர் - செல்புறங் கண்ட - போரை விரும்பும் மறவர் ஓடு புறங் கண்ட; எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை - இகழ்ச்சியற்ற தலைமையினை யுடைய முள்ளூரின் மலையுச்சியின்கண்; அரு வழி இருந்த பெருவிறல் வளவன் - பிறரால் காண்டற்கரிய இடத்தின் கண் இருந்த பெரிய வென்றியையுடைய சோழனது; மதி மருள் வெண்குடை காட்டி - திங்கள் போலும் வெண்குடையைத் தோற்றுவித்து; அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந - அக்குடையைப் புதுமையுண்டாக நிலைபெறுவித்த புகழ் மேம்படுந; விடர்ப் * திருக்கண்ணனுக்கு மாறாகத் திருக்கிள்ளி யென்று பாடங்கூறுவதும் உண்டு. அப் பாடல் பொருந்துவதன்று. |