| புலி பொறித்த கோட்டை - வரை முழைஞ்சில் வாழும் புலியை யெழுதப்பட்ட இலாஞ்சனையுடைய கோட்டையையும்; சுடர்ப் பூண் - விளங்குதலையுடைய அணிகலத்தினையும்; சுரும் பார் கண்ணி பெரும் பெயர் நும் முன் - வண்டார்க்கப்பட்ட கண்ணியையும் பெரிய புகழினையுமுடைய நும்முன்னாகிய தந்தை; ஈண்டுச் செய் நல்வினை ஆண்டு உயர்ந்தோர் உலகத்துச் சென்று உணீஇயர் - இவ்வுலகத்துச் செய்யப்பட்ட நல்ல அறத்தின் பயனை ஆண்டாகிய தெய்வ லோகத்துப்போய் நுகரவேண்டி; பெயர்ந்தனன் ஆகலின் - போனானாதலின்; ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் - நல்ல நெறியைக் கொன்ற பக்கத்தினையுடைய திசை யெங்கும் சூழ் வரும்; கவலை நெஞ்சத்து அவலம் தீர - கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம் கெட; நீ தோன்றினை - நீ வந்து தோன்றினாய்; நிரைத்தார்அண்ணல் - இணைந்த மாலையையுடைய தலைவ; கல் கண் பொடிய -மலையிடம் பொடிய; கானம் வெம்ப - காடு தீ மிக; மல்கு நீர் வரைப்பில் கயம் பலஉணங்க - மிக்க நீரெல்லையையுடைய நீர்நிலைகள்; பலவும் முளிய; கோடை நீடிய பைதறு காலை - இவ்வாறு கோடை நீடப்பட்ட பசுமையற்ற காலத்து; இரு நிலம் நெளிய- பெரிய நிலங் குழியும் பரிசு; ஈண்டி - திரண்டு; உரும் உரறு கருவிய மழை பொழிந் தாங்கு - உருமேறு முழங்கும் மின் முதலாயின தொகுதியையுடைய மழைசொரிந்தாற் போல எ-று.
முற்ற மென்றது, அதனையுடைய கோயிலை. வெளி முற்றமொடு வெண்குடை காட்டி யென இயைப்பினு மமையும். கோட்டை வெளியாகிய சுடர்ப்பூ ணென்றுமாம். ஞாயிற்றை அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங்கு முற்றமொடு நாட்டு அல்லல் தீர, வளவன் வெண்குடை காட்டி அக்குடை நிறுத்த புகழ் மேம்படுந, நிரைத்தார் அண்ணல், நும்முன் பெயர்ந்தன னாகலின், நெஞ்சத்து அவலம் தீர, பைதறு காலை மழை பொழிந் தாங்கு நீ தோன்றினை; ஆதலால், இவ் வுலகத்திற்குக் குறையென்னை எனக் கூட்டி வினை முடிவு செய்க.
அவுணர் கணங்கொண் டொளித்தென ஞாயிறு காணாத பருவரல் தீர அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங் கென்பது, தேவர்களும் அசுரர்களும் பொருவழிப் பகலும் இராப்போல இயங்கித் தாம் போர் செய்தற்பொருட்டு அசுரர் ஞாயிற்றைக் கரந்தார்கள்; ஞாலம் அதனால் உள்ள பருவரால் தீரத் திருமால் அதைக் கொண்டு வந்து விட்டதொரு கதை.
விடர்ப்புலி பொறித்த கோட்டை யென்றதனால், சோழனொடு தொடர்புபட்டு அவனுக்குத் துப்பாதல் தோன்றி நின்றது. ஆறு கொள் மருங்கின் என்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம்: சோழனுக்கு ஞாயிறும், சோழனில்லாத காவிரி நாட்டிற்கு இருள் சூழ்ந்த வுலகும், சோழனைக் கொணர்ந்த மலையமானுக்குத் திருமாலும் உவமை. சோழன் இல்லாதபோது அவனது தலைநகரும் வளஞ்சிறந்த நாடும் அல்லலுற்ற செய்தியை, முரசெழுந் திரங்கு முற்றமொடுஎன்றும், புனல் நெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னாடென்றும் குறித்தார். |