| மலையமானுடைய மள்ளூர் மலையைக் கபிலர் பயன்கெழு முள்ளூர் மீமிசை(புறம்.123) என்று பாடியுள்ளார். முள்ளூர்மலையை அவர் சிறப்புற வெடுத்துப் பாடிய பாட்டுக் கிடைத்திலது. இம் மூள்ளூர் மிக்க காவலும் பகைவர்க்குக் கொள்ளற் கருமையும் உடைய தென்றற்கு, செருப்புகல் மறவர் செல்புறங் கண்ட, எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசையென்றார். சோழன் ஒளித்திருந்த இடத்தை அருவழியென்று குறித்துள்ளார். வளஞ்சிறந்த நாடு முற்றும் தான் அடைதற்குரிய வகையில் வந்திருப்பவும், அதனை நினையாது சோழற்கே யுரித்தாக்கி அவனையே அரசனாக்கிச் சிறப்பித்தமையின், புகழ் மேம்படுநஎன்றார். சோழர்க்குரிய துணைவனாதலின், திருமுடிக்காரி தன் கோட்டையில் புலிப்பொறி வைத்திருந்தானாகலின், விடர்ப் புலி பொறித்த கோட்டையென்றார். இவ்வுலகத்தே செய்யப்படும் நல்வினைக்குரிய இன்பம் மறுமையில் மேலுலகத்துத் தோன்றி நுகரப் படும் என்பதுபற்றி, ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச்சென்று றுணீஇயர், உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன்என்றார். காரி இறந்தபின் நாட்டுக்குண்டாகிய நிலை கோடை நீடிய பைதறு காலை யாகவும், திருக்கண்ணன் தோன்றியது மழைபோல்வதாகவும், அவன் தலையளி மழை நீராகவும் குறிக்கின்றார். முற்றமென்றது, ஆகுபெயரால் அரசன் கோயிற்காகித் தலைநகரைக் குறித்துநின்றது. பண்டேபோல் தலை நகரையும் வெண்குடையையும் காட்டிப் புதுமையின் நிறுத்த வெனவுரைப்பினும் அமையும் என்றற்கு, வெளிமுற்றமொடு வெண்குடை காட்டி யென இயைப்பினு மமையுமென்றார். பெரும்பெய ரென்ற விடத்துப் பெயர் புகழ் குறிப்பது.
175. ஆதனுங்கன்
ஆதன் அழிசி, ஆதன் அவினி யென்பாரைப்போல ஆதன் நுங்கனும் ஒரு குறுநில மன்னன். வேங்கடத்தைச் சார்ந்த நாடு இவனதாகும். வேங்கடமலையும் இவற்கே யுரியதாகும். இவனுக்குப் பின் வந்தவனே வேட்டுவர் தலைவனான புல்லி யென்பான். புல்லி ஆதனுங்கனுக்கு முற்பட்டவனென்று கருதுபவரும் உண்டு. வேங்கடத்தில் இப்போது திருமால் கோயிலிருக்கும் பகுதியே ஆதனுங்கன், புல்லி முதலாயினோர் இருந்து நகரமைத்து வாழ்ந்த விடமாகும். சங்கச் சான்றோர் காலத்துக்குப் பின்னும் இளங்கோவடிகள் காலத்துக்கு முன்னுமாகிய இடைக்காலத்தில் இவ்விடத்தே திருமாலுக்குக் கோயிலுண்டாயிற்று. வேங்கடம் இன்றும் அழகிய சிறு சிறு அருவிகளாற் பொலிவதுபோலப் பண்டும் பொலிவுற்றிருந்த தென்பதை, கல்லிழி யருவி வேங்கடம் (புறம்.389) என்று சங்கச் சான்றோரும், வீங்குநீரருவி வேங்கட (சிலப். 11:41) மென்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. இவ்வாதனுங்கன் இரவலர் இன்மை தீர்க்கும் இனிய வுள்ளமும், சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையன். இவன்பால் கள்ளில் ஆத்திரையனார் என்னும் சான்றோர் மிக்க அன்பு பூண்டவர். கள்ளில் என்பது தொண்டைநாட்டிலுள்ளதோர் ஊர். ஆத்திரையன் என்பது இவரது இயற்பெயர். இஃது ஆத்திரேயன் என்பதன் மரூஉ வென்றும், எனவே, இவர் பார்ப்பனராவாரென்றும் கருதுவர். இதனை ஆதிரையானென்பதன் மரூஉவாகக் கோடற்கும் இடனுண்டு. |