தன்னொடு சூளுற்று உண்மென இரக்கும் - தன்னுடனே சார்த்திச் சூளுற்று உண்மி னென்று அவரை வேண்டிக் கொள்ளும்; பெரும் பெயர்ச் சாத்தன் - பெரிய பெயரையுடைய சாத்தன்; ஈண்டோ இன சாயலன் - எம் போல்வாரிடத்து இனிய மென்மையை யுடையன்; வேண்டார் எறி படைமயங்கிய வெருவரு ஞாட்பில் - இங்ஙனம் மெல்லியனாயினும் விரும்பாதா ரெறியும் படைக்கலம் தம்மிற் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்; கள்ளுடைக் கலத்தர் - வீரபானத்தையுடைய கலத்தினராய்; உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறு பேராளர் - அதனையுடைய செருக்கான் ஊர்க்குள்ளே யிருந்து சொல்லிய வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின் கண் மறந்த சிறிய பேராண்மையையுடையோர்; அஞ்சி நீங்குங்காலை - போர்க்களத்து அஞ்சிப் புறங்கொடுத் தோடுங் காலத்து; ஏமமாக - அவர்க்கு அரணாக; தான் முந்துறும் - தான் வலியான் முந்துற்று நிற்பன் எ-று. நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும், பின் அதனை மறத்தலாற் சிறுமையு முடைமையின், ‘‘சிறு பேராள’’ ரென்றார். ‘‘நெடுமொழி மறந்து’’ என்பதூஉம் பாடம். விளக்கம்: முற்றம் புக்க சான்றோர் ‘‘உண்ணாராயினும்’’ என்றதற்கு ஏது இது வென்பார், ‘‘அப்பொழுது உண்ணாராயினும்’’ என்றார்; பின்னர் உண்ணாது போகாரென்றற்கு, தன்னொடு சூளுறுதலாவது, ‘‘உண்ணீராயின் யானு முண்ணேன்’’ என்பது. சிறுபேராளர் அஞ்சி நீங்குமிடம் ஆண்டாதலின், ஈண்டென்றதற்கு எம்போல்வாரிடம் என்றார் அஞ்சி நீங்கும் சிறுபேராளர், நெடுமொழி கூறிய காலமும் இடமும் குறிப்பார், ‘‘கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடுமொழி’’ என்றார். அஞ்சி நீங்கு மிடம் இது வென்றற்கு, ‘‘வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்’’ பென்றார். ஞாட்பு, போர். ஈண்டு இன்சாயலனாகும் இக் கீரஞ்சாத்தன், தன் மறவர் அஞ்சுங்காலை, ஏமமாக முந்துற்றுத் தறுகண்மை மிக வுடையனாம் என்பார், ‘‘முந்துறும்’’ எனக் காரியத்தின் வைத்து உபசரித்தார். 179. நாலை கிழவன் நாகன் பாண்டி நாட்டிலுள்ள நாலூரென்னு மூர்ப்பெயர் நாலை யென மரீஇயிற்று. இந்நாலூர் அருப்புக்கோட்டை நாட்டின்கண் உள்ளது; திருமுனைப்பாடி நாட்டிலுள்ள நாலூர் (A.R. 513/1921) இந் நாகனுக்குரியதன்று. அவ்வூர்க்குத் தலைவனான நாகன், நாலை கிழான் நாகன் என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் பாண்டி வேந்தனுக்குத் துணையாய் நின்று, படை வேண்டுமிடத்துப் படைத்துணை புரிந்தும், வினை செயல் வேண்டுமிடத்து அதற்குரிய கருத்துக்களை வழங்கியும் விளங்கினான். இச்செயல்களால் இவற்குப் பெருஞ்செல்வ முண்டாக, அதனை இவன் பரிசிலர்க்கு வழங்கி நற்புகழ் நிறுவினான். இவன் காலத்திருந்த பாண்டியன் பெயர் தெரிந்திலது. அவன் மண் பல தந்த பாண்டியன் எனப்படுவதுபற்றி, அவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கருதுபவரும் உண்டு. |