பக்கம் எண் :

388

 

                    178. பாண்டியன் கீரஞ்சாத்தன்

     பாண்டியன் கீரஞ்சாத்தன் என்பான் முடிவேந்த னல்லன். பாண்டி
வேந்தர்க்    கீழ்   இருந்த குறுநிலத் தலைவன். கீரன்  என்பானுடைய
மகனாதலின் கீரஞ்சாத்தன் எனப்பட்டான். ஆவூர் மூலங்கிழார் அவனைக்
காணச் சென்றிருந்தபோது, சான்றோர்பால் அவன் காட்டிய அன்பு அவர்
உள்ளத்தைக் கவர்ந்தது. போரில் அவன் தன் படைக்கரணாக முந்துற்று
நிற்கும் திறமும் இவர்க்கு   நன்கு  தெரியவந்தது. பின்பு    அவன் செய்த
சிறப்பினைப் பெற்று மகிழ்வெய்திய ஆவூர் மூலங்கிழார் அவன்பாற் கண்ட
நலங்களை இப்பாட்டின்கண் குறித்துரைக்கலுற்று, “யானைகளும் போர்க்
குதிரைகளும் நின்று செருக்கும் கீரஞ்சாத்தனுடைய நெடுநகர் முன்றிலில்
மணல்    பரந்து இனிய காட்சி வழங்கும்; அவ்விடத்தே புக்க சான்றோர்
பசியின்மையின்     உண்ணாராயின்,    தன்னொடு    சூளுற்று,    
உண்டல் வேண்டுமெனப் பெரிதும் இரந்து வேண்டிக் கொள்வன். இவ்வாறு
எம்பால் இனிய சாயலையுடையனாயினும், போரிடத்துத் தன் வீரர் தம்
உள்ளூரிடத்தே குடிமயக்கத்தால் வஞ்சினங் கூறி விட்டுப் பகைவர்  
எறியும்   படைக்கஞ்சி யுடைந்து பிறக்கிடுவாராயின், கீரஞ்சாத்தன்
சரேலென அவ்விடத்தை யடைந்து அவர்க்கு அரணாகத் தானே முந்துற்றுச்
செல்வன்”என்று கூறுகின்றார்.

 கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு
                  பணைமுனிந்து
காலியற் புரவி யாலு மாங்கண்
மணன்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணா ராயினுந் தன்னொடு சூளுற்
5றுண்மென விரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
 ஈண்டோ வின்சா யலனே வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பிற்
கள்ளுடைக் கலத்த ருள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
10அஞ்சி நீங்கும் காலை
 ஏம மாகத் தாமுந் துறுமே.     (178)

     திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை. பாண்டியன்
கீரஞ்சாத்தனை அவர் பாடியது.

     உரை: கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு - கம்பத்தை
வெறுத்து நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானையோடு; பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் - பந்தியை வெறுத்துக் காற்றுப்
போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து; மணல் மலி
முற்றம் புக்க சான்றோர் - இடு மணல் மிக்க முற்றத்தின்கட் புக்க
சான்றோர்; உண்ணா ராயினும் - அப்பொழுது உண்ணா ராயினும்;