பெரும்புலர் வைகறைச்சீர் சாலாது - பெரிய புலர்ச்சியையுடைய விடியற்காலத்துச் சீருக்கு நிகரொவ்வாது எ-று. எந்திரப் புழையையுடைய நணிநணியிருந்த குறும்பிற் கள்மாறு நீட்டத் தும்பவுண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கரேறி யிருந்து நாவற்கனி கொய்துண்ணு மென இயையும். பாடிப் பெற்ற யானையும் பன்னாள் திரங்கிப் பெற்றமையின், பனங்குடையின் மிசையும் வைகறைச்சீர் சாலாதென்றார். வெளிறுகண் போகப் பாடியெனக் கூட்டி, வெண்மை இடத்தினின்றும் நீங்கப் பாடி யெனினு மமையும். வைகறைச்சீர் சாலாதென்றது, அக்காலத்து அவன் செய்யும் சிறப்பினை நோக்கி. ‘‘கைம்மாறு நீட்டி நணிநணி யிருந்து குறும்பல் குறும்பின் ததும்ப உண்டு வைகி’’ என்று பாடமோதுவாரு முளர். விளக்கம்: மன்னரை ‘‘ஒளிறுவாண் மன்ன’’ ரென்றும், அவர் மனையை, ‘‘ஒண்சுடர் நெடுநக’’ ரென்றும் கூறியது தாம் வேண்டிய சிறப்பின்மை முடித்தற்கு கண் வெளிறு போதல், மரம் வெளிறு போவதுபோலப் பயனாகிய ஒளி இல்லையாதல். ஒளியிழந்த கண் வெளிதாதலை இன்றும் காணலாம். கண் ணென்பதற்கு இடமெனப் பொருள் கொண்டு வெண்மைப்பகுதி கண்ணிடத்தினின்றும் நீங்க என்று உரைத்தலு முண்டென்பர் உரைகாரர். வெண்மை நீங்குதலாவது, நெடுங்காலம் பாடுதலால்நன்கு சிவந்து விடுதல். ஆதிக்குத் தமராயினார் இனிது புகுப வென்பதனால் மாறுபட்டோர் புகுதற்கரிதாதலும் காட்டினார். காரியாதியின் அரண்களில் அமைந்திருந்த எந்திரப் படு புழையின் இயல்பு கூறுவார், போர்க்காலத்தே காவற்சிறப்பு இப்பெற்றித் தென்றற்கு,‘‘அமரெனின் திங்களும் நுழையா’’ தென்றார். கள்ளை மிக வுண்டவழி, அதன் களிப்பால் கண் சிவத்தலின், கள்ளுண்டு மதர்க்கும் மறவரைச் செங்கணாடவ ரென்றார். துடரி, ஒருவகைப் பழம்; ஈச்சம் பழம் என்றும் கூறுப. இருந்து கொய்துண்ணும் என்பதைக் கொய்து இருந்துண்ணும் என மாறுக. பிணங்கு அரில் குடநா டென்பதில், அரில் என்பது ஆகுபெயராய் அரில் பட்ட காட்டை உணர்த்திற்று. அரில் பிணக்கு; செடி கொடிகள் தம்மிற் செறிந்து பின்னக்கிடப்பது. பெருத்த என்புழிப் பெருத்தல் மிகுதல். இருள் மயங்கு வைகறையின் வேறுபடுத்த, ‘‘பெரும்புலர் வைகறை’’ யென்றார். பனையோலையாற் செய்யப்பட்டு உட்குடைவாக இருத்தலின், ‘‘பனங்குடை’’ எனப்பட்டது. இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக்களிலும், ஆண்டாள் கோயில் கல் வெட்டுக்களிலும் ‘‘மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்’’ என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப்புத்தூர் பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லிபுத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய்தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் ‘‘பளியர்’’ என இந்நாட்டவரால் வழங்கப்படுகின்றனர். |