| உரை: மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் - மன்றத்தின் கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை; கருங் கண் எயிற்றி காதல் மகனொடு - கரிய கண்ணை யுடைய மறத்தி காதல் மகனுடனே; கான இரும் பிடி கன்று தலைக் கொள்ளும் - காட்டு வாழும் கரிய பிடியினது கன்று வந்தெடுக்கும்; பெருங் குறும்பு உடுத்த வன்புல இருக்கை - பெரிய அரண் சூழ்ந்த வலிய நிலத்தின்கண் ஊராகிய இருப்பையும்; புலாஅல் அம்பின் - புலால் நாறும் அம்பினையும்; போர் அருங்கடிமிளை - பொருதற்கரிய காவற்காட்டினையு முடைய; வலாஅ ரோன் - வல்லாரென்கிற ஊரிடத்தான்; வாய் வாள் பண்ணன் - வாய்த்த வாளையுடைய பண்ணன் ; உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின் - நினது உண்ணப்பெறாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்; நீ இன்னே சென்மதி - நீ இப்பொழுதே செல்வாயாக; சென்று அவன் பகைப்புலம் படரா அளவை - போய் அவன் வேற்றுப்புலத்துச் செல்லாத எல்லையில்; நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கு - நினது பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையைக் காட்டினையாய்க் கொள்ளுதற்கு எ-று.
அம்பிற் போரருங் கடிமிளை என்பதற்கு, அம்பாற் பொருதற்கரிய கடிமிளை யெனினு மமையும். காட்டிப் பரிசில் கொள்ளுதற்கு இன்னே சென்மதி யெனக் கூட்டுக. மதி: முன்னிலை விளக்கும் அசை.
விளக்கம்: மறவர் மனை மன்றத்தின் அருகே அதனைச் சார இருத்தலின், மன்றத்தில் நிற்கும் விளாமரத்தின் பழம் மனையின் முன்றிலில் விழுகிறதென்றார். பிடியானை கடிமிளையில் வாழ்வதென்றும், மறவர் இருக்கை புறஞ்சேரி யென்றும் கொள்க. அதனை யடுத்திருப்பது அகழும் அரணுமாதலின், இரண்டு மகப்பட பெருங்குறும்புஎன்றார் கடிமிளையும் ஆழ் கிடங்கும் உயர் மதிலும் அம்புடை யெயிலும் என அரண்களை வகுத்துரைக்கும் இயைபுகொண்டு, இவ்வாறு கூறப்பட்டது. கடிமிளைக் குண்டு கிடங்கி, னெடுமதில் நிரை ஞாயில் அம்புடையா ரெயில்(பதிற். 20) எனப் பிறரும் கூறுதல் காண்க. புலால் நாறும் அம்பினையும், வாய் வாளையுமுடைய பண்ணனென்றும், இருக்கையையும் கடிமிளையையு முடைய வலாரென்றும் இயைப்பது நேரிது. |