| 182. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
இளம்பெருவழுதி யென்பான், பாண்டிவேந்தருள் ஒருவன். கடலிற் கலஞ்செலுத்திப் பிறநாடுகட்குச் சென்று வாணிகஞ் செய்தலும், மீன் பிடித்தலும், முத்துகுளித்தலும் பண்டைப் பாண்டியர் மேற்கொண்டிருந்த தொழில். பாண்டி வேந்தரும் இத் தொழிற்கு வேண்டும் ஆதரவு புரிந்துவந்தனர். தமிழரசர் கடாரம், சாவகம், ஈழம் முதலிய நாட்டின்கட் கலஞ்செலுத்திப் படைகொண்டு சென்று போருடற்றி, அரசு முறை நிறுவிய செய்தி, கடார முதலிய நாட்டு வரலாறுகள் குறித்தோதுகின்றன. அங்ஙனம் சென்ற கலங்களில் அரச குமரரும், பரத குமரரும் செல்வது வழக்கம். பாண்டிநாட்டு அரசகுமரருள், இளம்பெருவழுதி, இளமையிலே கற்பவை கசடறக் கற்று, அக்கல்விக்குத் தக ஒழுகும் மேம்பாடுடையவன். அவன் அவ்வப்போது பாடிய பாட்டுக்கள் சான்றோர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. அத்தகைய நலம் வாய்ந்த அவன் கலமூர்ந்து செல்கையில், கலங் கவிழ்ந்து மாண்டான். அதனால் அவனைச் சான்றோர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியென்று குறித்தனர். கடலுள் மாய்வதற்கு முன், அவன் சான்றோர் சான்றாண்மையை வியந்து கூறுவானாய்த், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெரியோர் உளராதலால் இவ்வுலகம் உளது; இன்றேல், இது மண்புக்கு மாயும் என்ற கருத்தால், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் அதனைத் தமித்திருந்துண்ணார்; யாரையும் வெறார்; பிறர் அஞ்சுவ தஞ்சுவர்; அஞ்சி அதனைத் தீர்த்தற்கண் சோம்பார்; புகழ்ப் பொருட்டுத் தம் உயிரையும் ஈவர்; பழியால் உலக முழுதாளும் உயர்வு வரினும் வேண்டார்; மனக் கவலையுங் கொள்ளார்; இவ்வியல்பினோடு பிறர் நலம் பேணும் பெரியோர் உளர்; அவரால் இவ் வுலகம் உளதாகின்றதுஎன்று இப்பாட்டைப் பாடியுள்ளான்.
| உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் | 5 | புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் | | உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே. (182) |
திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி. கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டு.
உரை: உண்டால் அம்ம இவ்வுலகம் - உண்டேகாண் இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் - இந்திர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயினும்; இனிதெனத் தமியர் உண்டலும் இலர் - அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர்; |