| | ஆதலாற்றான் பண்டைத் தமிழ் நூல்கள், தமிழ்க் கருத்துக்கள் பலவாகவும் வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவும் கொண்டுள்ளன. தமிழ்க் கருத்துக்களே நிறைந்திருந்த இலக்கணங்களும் இலக்கியங்களும் குறிக்கொண்டு தேடியழிக்கப்பட்டன. வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவாயினும் உடைய பழந்தமிழ் நூல்களே உளவாயின. இப்போதுள்ள சங்க இலக்கியங்கள் நூற்றுக்கு மூன்று விழுக்காடேனும் வடவாரியக் கருத்துக்களை யுடையவா யிருத்தலாற்றான் நிலை பேறு பெற்றன. அடைக்கலம் புக்கு உட்பகையாய்ப் புறத்தே வெளிப்படா தொழுகினோ ரொழிய, வெளிப்படையாய்ப் பொரவந்த ஆரியப்படையினை வஞ்சியாது பொருது வெற்றி கொண்ட மாண்பினால் இந்நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்விளங்க லுற்றான். கோவலனைக் கொலைபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியனையும் இளங்கோவடிகள், வடவாரியர் படை கடந்து, தென்றமிழ்நா டொருங்கு காணப், புரைதீர் கற்பின் தேவி தன்னுடன், அரைசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்என்பர்.
இவ்வேந்தனது நாடு நானிலத் தைந்திணை வளமும் பெருகவுடைய தாயினும், கல்வி வளம் பெறாதாயின், சீரழியு மென்பதைத் தெளிய வுணர்ந்தான். நாட்டுமக்கள் கல்வியறிவுடையராதல் வேண்டி, கல்வி வழங்கும் ஆசிரியனுக்கு உற்றவிடத் துதவுதல் வேண்டும்; வேண்டுமளவிற்கு மிகவே அவற்குப் பொருள் வழங்குதல் வேண்டும்; மிக்க பொருள் கொடுத்தவழியும் ஆசிரியனை வழிபடுதற்கு வெறுப்படைதலாகாது; இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி இப்பாட்டின்கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்படமாட்டாது என்றும், அவன் நாட்டு அரசு முறையும் கல்வியறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை யேலாதென்றும், கற்றோன் கீழ்நிலையில் பிறந்தானாயினும், அவற்குத் தலைமை யுண்டாகும்; மேல்நிலையிற் பிறந்தோனும் அக்கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான் அக் கல்விகுறித்து வழிபட்டொழுக வேண்டுமென்றும், இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்றும் வற்புறுத்தியுள்ளான்.
| | உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் | | 5 | ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் | | | மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் | | 10 | மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (183) |
திணையுந் துறையு மவை. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. |