பக்கம் எண் :

399

 

     உரை: உற்றுழி உதவியும் - தன் ஆசிரியருக்கு ஓர் ஊறு பாடு
உற்றவிடத்து  அது  தீர்த்தற்கு  உவந்து  உதவியும்; உறுபொருள்
கொடுத்தும் - மிக்க பொருளைக் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது
கற்றல் நன்று - வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு
அழகிது; பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் - அதற்கு என்னோ
காரணமெனின்,  பிறப்பு  ஒரு  தன்மையாகிய   ஒரு  வயிற்றுப்
பிறந்தோருள்ளும்; சிறப்பின் பாலால் - கல்வி விசேடத்தால்; தாயும்
மனம் திரியும் - தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ
ருள்ளும் - ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே; மூத்தோன் வருக
என்னாது-;   அவருள்  அறிவுடையோன்  ஆறு - அவருள்
அறிவுடையோன் சென்ற நெறியே; அரசும் செல்லும் - அரசனும்
செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் வேறுபாடு
தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் -
கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்; மேற்பால் ஒருவனும் அவன்கட்
படும்- மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது
கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் எ-று.

     விளக்கம்: உற்றுழி யுதவுக என்றும், உறு பொருள் கொடுக்க என்றும்
அறிவுறுத்தவன், “பிற்றை நிலைமுனியாது கற்க”என்றது, இவ்விரண்டும்
செய்தவழித் தன்பால் உயர்வும் இவற்றைப் பெறும் ஆசிரியன்பால் தாழ்வும்
உண்டாதலால் அவ்வுயர்வுவழித் தோன்றும் மானம் ஆசிரியன் ஆணைவழி
நின்று தாழ்ந்து கேட்டற்குத் தடை செய்யும்; அதனால்  கல்வியறிவு நன்கு
பெறப்படாமையோடு மாணாக்கர்க்குக் கடைமைநிலையும் உண்டாதலால், அம்
மானம் அறநெறிப்பட்ட மானமாகாதென விலக்கிப் “பிற்றைநிலை  முனியாது
கற்க”என்றான். ஆசிரியற்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
மாணாக்கன் பொருணிலையில்   உயர்ந்தானாயினும்,  அவ்வுயர்வை
மனங்கொள்ளாது  பணிவுடையனாதல்  அறமாதலாலும், பணிவிலனாதல்
அறத்துக்கு மாறாதலாலும்,  செல்வ   மாணாக்கன்   ஆசிரியன்    பால்
பணிவிலனாகும் மானம் “அறநெறிப்பட்ட மானமாகா’ தாயிற்று. கல்வி
பயிலும் மாணாக்கன் தன் ஆசிரியனுக்கு ஓரளவு பொருள் கொடுத்தற்குக்
கடமைப்பட்டவனே. உரிய அளவு பொருள் கொடுத்தலின்,  ஆசிரியனுக்கு
ஊறுபாடுற்றவிடத்து உதவுதல் வேண்டா எனக் கருதற்க என்றற்கு “உற்றுழி
யுதவியும்”என்றும்,  உரிய  அளவினும்   மிகைபடவே தருக என்பான்,
“உறுபொருள் கொடுத்தும்”  என்றும் கூறினான்  ஊற்றுழி யுதவுதல்
எல்லார்க்கும் பொதுவாய் அறமாதலின் அதனை  முதலிலும், உறுபொருள்
கொடுத்தல் செல்வமுடையார்க்கே இயல்வதாகலின், அச்சிறப்புப்பற்றி
அதனைப் பின் வைத்தும் மொழிந்தான்.    இக்காலக்    கல்வித் துறையில்
இவ்வுணர்வு    அறவே    யில்லாதொழிந்தமையின்,    ஆசிரியர்களை
அடிமைகளாகக் கருதி யல்லற்படுத்தும் கீழ்மைப் பண்புடைய செல்வமாக்கள்
கல்வித் துறைகட்குத் தலைவர்களாகத் தோன்றி, நாட்டு மக்களின் நல்லறிவை
முளையிலே கெடுத்து, அவரிடையே ஒருமை யுணர்வும் சீர்த்த புலமையும்
உண்டாகாவாறு செய்துவிட்டதை இக்கால நிலை யெடுத்துக் காட்டுகிறது.
உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்