| கல்வி பயிலும் மாணாக்கற்குப் பிற்றைநிலை எற்றுக்கு வேண்டுவது? ஒருவர்பால் அரிய பொருளொன்று உளதாயின் அதனைப் பெற முயல்வோர் அவர்க்கு உற்றுழி யுதவி அவர் அன்பைப்பெற முயல்வர்; அன்புளதானாலன்றி அருமையுடைய பொருளைக் கொடுத்தற்கு அவர்க்கு மனமுண்டாகாது. அல்லதூஉம், அவ்வரிய பொருள் விலைகொடுத்துப் பெறற்பாலதாயின், அதன் விலையினும் மிக்க பொருளைக்கொடுத்துப் பெற முயல்வர். இஃது என்றும் காணக்கூடிய உலகியல் நிகழ்ச்சி. ஆசிரியன்பால் உள்ள பொருளோ, அவன் மனங் கனிந்து வழங்குதல் வேண்டு மெனத் தானே விழைந்து கொடுத்தாலன்றி, வேறு எவ்வகையாலும் எத்திறத்தாராலும் பெறக்கூடியதன்று. இதனைக் கொங்கு வேளிர், அரசின் ஆகாது ஆணையின் ஆகாதுஎன்றது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அன்பும் வழிபாடுமே ஆசிரியன்பாலுள்ள அறிவுச் செல்வத்தைப் பெறுதற்கு வாயிலாவன. ஆனதுபற்றியே இப்பாண்டியன், உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்அன்பு செய்க; பிற்றைநிலை முனியாதுவழிபடுக என்று எடுத்த எடுப்பிலேயே வற்புறுத்தினான். திருவள்ளுவரும் உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்உயர்ந்தோர் என்றும், அவ்வாறு கல்லாதவர் கடையரேஎன்றும் கூறினார். பெற்ற தாய்க்குத் தன் வயிற்றிற் பிறந்த பிள்ளை எத்துணைப் பொலிவற்றிருப்பினும் மனவெறுப்புண்டாகாது; திருவள்ளுவர், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்என்பது காண்க. அத்தகைய தாயும் தன் மகன் கல்வியில்லாமையாற் கடையனானா னென்பது காண அருவருப்புக் கொள்வளென்பான். தாயும் மனம் திரியும்என்றான். தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்பது, பெற்றோர்க்கும் கற்றோர்க்கும் நோக்கமாதலின், மாநிலத்து மன்னுயிர்க் கின்ப வாழ்வு வழங்கும் அரசு முறை அறிவுடையோனையே நோக்கி யியங்கும் என்பான், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்றான். அறிவுடையோன், படை வேண்டுவழி வாளுதவலும், வினை வேண்டுவழி அறிவுதவலும்கடன் என்பதை வடநெடுந்தத்தனார் உரைத்தவாற்றால் இனிதறியலாம். பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்ற நால்வகையினையும், நாற்பால்என்றான். இது வடவாரியப் பகுப்பு முறை. தமிழகத்தில் தமிழ் மக்களிடையே இப் பாகுபாடு இன்றும் கிடையாது; என்றும் இருந்ததில்லை வடவாரிய நூல்களையடிப்படையாகக் கொண்டெழுந்த இந்து லா(Hindu Law) வில் மட்டில் இருக்கிறது. வேளாளர் கீழ்ப்பாலாராயின், அவர்க்குரிய தொழிலான உழவு உயர் தொழிலாகத் திருவள்ளுவர் முதலாய சான்றோர்களால் உயர்த்துக் காட்டப்பட மாட்டாது. கல்வியறிவு நாற்பாலார்க்கும் பொதுவாதலின், அறிஞனை இப் பாற்பாகுபாடு கட்டுப்படுத்தா தென்றற்கு, கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமேஎன்றான். கீழ்ப்பா லொருவன் கற்பின்என்றாற்போல மேற்பா லொருவன் கல்லா னாயின் அவனும் என்னாது, மேற்பா லொருவனும்என்றும், உரைகாரர், மேற்குலத்துள் ஒருவனும்என்றும் கூறியது, மேற்பாலா னொருவன் கற்றவனாயினும், கீழ்ப்பாலொருவன் கற்றுத் தலைவனாயின், அவன்பாற் சென்று வழிபடுதற்குரியன் என்பதை வற்புறுத்துகிறது. |