பக்கம் எண் :

401

 

184. பாண்டியன் அறிவுடை நம்பி

         பாண்டியன் அறிவுடை நம்பி பாண்டிநாட்டை யாண்டு வருகையில்
சோழநாட்டு உறையூரில் கோப்பெருஞ் சோழனிருந்து ஆட்சி புரிந்தான்.
பாண்டிநாட்டுப் பிசிர் என்னும்  ஊரிலிருந்து   சான்றோரான ஆந்தையார்
கோப்பெருஞ் சோழனைக் காணாமலே அவனுடைய குண நலனும் ஆட்சி
நலமும் சான்றோராற் கேள்வியுற்று, அவன்பால் பெரு   நட்புப்  பூண்டனர்.
அந்நட்பு, “உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் நட்பாய்”கோப்பெருஞ் சோழன்
வடக்கிருந்து உயிர்விட்டவழி இவரும் உயிர் விடுதற் கேதுவாயிற்று.
பாண்டிநாட்டுச் சான்றோராகிய பிசிராந்தையார்க்குத் தம் நாட்டு வேந்தனான
பாண்டியன் அறிவுடை நம்பிபால் பிறவாமல், சோழநாட்டு கோப்பெருஞ்
சோழன்பால் பெருநட்புள தாயிற்றெனின், இச்சான்றோருடைய அன்பைப்
பெறுதற்குரிய நலம் இப்பாண்டியன்பால் இல்லை யென்பது தானே
பெறப்படும்.

         இப்பாண்டியன் தன் குடிகளிடத்து இறை வாங்கும் நெறியிற்
பெருந்தவறு செய்தான். இவன்பால் சூழ்ந்த அரசியற் சுற்றத்தார் இவனை
இடித்துரைத்து நெறிப்படுத்தும் நேர்மையின்றி, நீர் போகும் வழிப் புல்
சாய்ந்து கொடுப்பதுபோல, இவன் விழைந்த வழியெல்லாம் நுழைந்து
கொடுத்து அரசியலில் வாழும் மக்கட்குத் துன்பமுண்டாக்கினர். மக்கள்
பால் வேந்தனுக்கு அன்பு சுருங்கியதாயிற்று. குடிகளை மிக வருந்தி இறை
வாங்குவதில் அவ்வேந்தன் விருப்புடையனாயினான். இதனைக் காணப்
பொறாத சான்றோர் பிசிராந்தையாரை அரசன்பால் விடுத்து நல்லறிவு
கொளுத்துமாறு வேண்டினர். அவரும் அரசன் செயல்வகைகளைத் தாமே
ஆராய்ந்தார். குற்றம் அரசனது இறை வாங்குந் திறத்திலும் அதற்குத்
துணைசெய்யும் அரசியற் சுற்றத்தார் திறத்திலும் இருப்பது கண்டார். அரசன்
ஆடல் பாடல் முதலிய இன்பத் துறைகளில் எளியனாயிருப்பதும் தெரிந்தது.
இக்குறைகளை  அரசற்  கெடுத்துரைத்து நெறிப்படுத்துவதுநாட்டுக்கு
இன்றியமையாத பணியும் சான்றோர்க்குத் தாம் செய்யக்கடவ கடனுமாதலை
யுணர்ந்தார்; பாண்டியனைச் சென்று கண்டார். ஆந்தையார் கோப்பெருஞ்
சோழன் முதலிய பெருவேந்தர்  பாராட்டிக்   கேண்மை  கொள்ளும் புலமை
நலம் சிறந்திருப்பதை நன்கறிந்தவனாகலின், வேந்தனும் அவரை விருப்போடு
வரவேற்றான். அக்காலை, இப் பாட்டினைப் பாடிக் காட்டி அப்பாண்டியனை
நெறிப்படுதினார். இதன்கண், “களிற்றி யானைக்கு  உணவாகும் நெல், அது
விளையும்  நிலத்திலிருந்து   கொணரப்   பட்டுக்   கவளங்  கவளமாகக்
கொள்ளப்படுமாயின்,   விளைநிலம் ஒருமா அளவினும் குறைந்த தாயினும்
பல நாட்கள் அக்களிற்றுக்கு உணவு தரவல்லதாம். யானைக்கென்று நூறுமா
நிலத்தை விட்டு நெல் விதைப்ப, அது விளைந்து சாய்ந்து கிடக்கையில்
அதனைத் தனியே மேயவிடின், அதன் வாய் புகுமளவினும் கால்களால்
கெடுவது  மிகுதியாகும்;   இவ்வாறே  வேந்தனும்   தான்  பெறுதற்கரிய
அரசிறையை நெறியறிந்து முறையே கொள்வானாயின், நாடு பெரும் வளம்
படைத்துச்   செல்வத்தாற்  புகழ்   பெறும்;  அவ்வேந்தன்  நாடோறும்
வரிசையறியுந் திறமில்லாச் சுற்றம் சூழத் தானும் மெல்லியனாய்க் குடிகள்பால்
அன்பின்றி மிக்க இறையை வாங்கலுறுவானாயின், யானை புக்க விளை நிலம்
போல, அவற்கும் பொருள் சேராது; நாடு கெட்டழியும்”என்று
செவியறியுறுத்துள்ளார்.