பக்கம் எண் :

402

 
 காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
5 அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
 கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
10யானை புக்க புலம்போலத்
 தானு முண்ணா னுலகமுங் கெடுமே.(184)

     திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

     உரை:
காய் நெல் அறுத்துக் கவளங் கொளின் - காய்த்த
நெல்லை யறுத்துக் கவளமாகக் கொள்ளின்; மா நிறை வில்லதும்
- ஒரு மாவிற் குறைந்த நிலத்திற் கதிரும்; பல்நாட் காகும் - பல
நாளைக்காகும்; நூறு செறு வாயினும் - நூறு செய்யாயினும்; தமித்துப்
புக்கு  உணின் - யானை  தனித்துப்  புக்கு  உண்ணுமாயின்; வாய்
புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் - அதனது வாயின்கட் புகுந்த
நெல்லினும்  கால்  மிகவும்  கெடுக்கும்;  அறிவுடை  வேந்தன் -
அப்பெற்றியே அறிவுடைய அரசன்; நெறி அறிந்து கொளின் - இறை
கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்; நாடு கோடியாத்துப்
பெரிது நத்தும் - அவன்  நாடு  கோடிப்  பொருளினை
யீட்டிக்கொடுத்துத் தானும்  மிகவும்  தழைக்கும்; கிழவன்
மெல்லியனாகிய - வேந்தன் அறிவால் மெல்லியனாகிய; வைகலும்
- நாடோறும்; வரிசை அறியாக் கல்லென்  சுற்றமொடு - தரமறியாத
உறுதி  கூறாது  அவன் விரும்புவதனையே தானும் கூறும்
ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி; பரிவு  தப  எடுக்கும்
பிண்டம்  நச்சின் - அன்பு  கெடக் கொள்ளும் பொருட்டொகுதியை
விரும்பின்; தானும் உண்ணான் உலகமும் கெடும் - தானும்
உண்ணப்பெறான் உலகமும் கெடும் எ-று.


     
பரிவு தவ என்றோதி, அக்குடிகட்கு வருந்த மிக வென்று
உரைப்பாருமுளர். ‘மெல்லியன் கிழவனாகி’ யென்றும் பாடம்.

     விளக்கம்: மா, குழி, வேலி யென்பன நிலவளவை வகை. இருபது மா
கொண்டது ஒரு குழி; நூறு குழி கொண்டது ஒரு வேலி. செய்யென்பது ஒரு
தளை. கோடி, மிக்கதோர் அளவினைக் குறிப்பது. நந்தும், தழைக்கும்;