| நந்துதல் இப்பொருட்டாதலை, நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடும் (குறள். 235) என்பதனாலு மறியப்படும். மெல்லியன், அறிவால் வன்மையில்லாதவன், வெள்வே லண்ணல் மெல்லியன் போன்ம்(பதிற். 51) எனப் பிறரும் கூறுதல் காண்க. வரிசை, தகுதி; பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்(குறள்.528) என்பதனால் வரிசையறிதல் இன்றியமையாமையறிக. இப்பாட்டின் கருத்தையே, வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளும், காய்த்தநெற் கவளந் தீற்றின் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின், நீத்தநீர் ஞாலமெல்லா நிதிநின்று சுரக்கு மன்றே (சீவக.2907) என்று திருத்தக்கதேவர் கூறுதல் காண்க.
185. தொண்டைமான் இளந்திரையன்
கச்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டைநாட்டு வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். அவர்களைத் தொண்டையர் என்றும் வழங்குவர். இவ்விளந்திரையனையும் சான்றோர் தொண்டையோர் மருகஎன்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும். வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்(அகம். 213) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இத்தொண்டையரை, உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டை யோர்(பெரும்பாண். 454-5) என்றும், பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்(குறுந். 240) என்றும், வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் (அகம்.213) என்றும், சான்றோர் கூறுவதை, நோக்கின் இத் தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போருடற்றும் சிறப்புடையரென்பது தெளிவாம். அதியமான் நெடுமானஞ்சியின் பொருட்டு ஒளவையார் தூது சென்றதும், இத்தொண்டைமான்களில் ஒருவனிடமேயாகும்.
இத் தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தருமரபின் உரவோன் உம்பல்(பெரும்பாண்.29-31) என்பதனால், இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்றும், அவன் வழித் தோன்றல் இவனென்றும் அறியலாம். வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந்தானென மணிமேகலை கூறுகிறது. பின்பு அவன் அக் காரணத்தால் திரையனெனப்பட்டானென்றும், வேந்தன் மகனென்றற் கடையாளமாகத் தொண்டைக்கொடி யணிந்திருந்ததுபற்றி அவன் தொண்டைமானாயினான்; அவனாண்ட நாடு தொண்டை நாடாயிற்றென்றும் கூறுப இத்திரையன், |