பக்கம் எண் :

404

 

தமிழ் வேந்தர் மூவருள்ளும் “அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்”
உடைமையாற் சிறந்தவனென்றும், “குணகடல் வரைப்பின் முந்நீர்
நாப்பண், பகற்செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறை வேண்டுநர்க்கும்
குறை வேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி”
மேம்பட்டவனென்றும், “புலவர் பூண்கட னாற்றிப் பகைவர், கடிமதி
லெறிந்து குடுமி கொள்ளும், வென்றி யல்லது வினையுடம் படினும், ஒன்றல்
செல்லா”உரவோனென்றும், அவன் நாட்டில் ஆறலைகள் வரும் பிற தீங்கு
புரிவோரும் இலரென்றும் பெரும்பாணாற்றுப்படை பெரிதெடுத்துப்
பேசுகின்றது.

     இவ்வாறு செங்கோன்மையால் சிறப்புமிக்க இளந்திரையன்
ஆட்சியில் அளியுந் தெறலும் எளிய முறையில் நடந்தன. இவனைப்
பகைத்து மலைந்த வேந்தர்களின்    மன்றங்கள்    பாழ்பட்டன;  
இவனை நயந்தவர் நாடுகள் நன்பொன் பூப்ப நலமிகுந் தோங்கின.
நாடோறும் வேந்தர் பலரும் பல்வேறு வகையில் பணிந்து, “நட்புக்
கொளல் வேண்டி நயந்திசினோரும், துப்புக் கொளல்வேண்டிய    
துணையி லோரும், கல்வீ ழருவி கடற்படர்ந்தாங்கு”இவன்பால்
வந்தவண்ண மிருந்தனர். இவர்கட்கு வேண்டுவனவற்றை அருளிய இவ்  
விளந்திரையன், அரசியலின் செம்மை குறித்து அவர்கட்குச் சில அறிவுரைகளும்
வழங்கினன். அவற்றுட் சில பாட்டுமாம். இங்கே
காட்டப்படும் பாட்டு அவற்றுள் ஒன்றாகும். இதன்கண், “அரசியலை ஒரு
சகடமாக வுவமித்து, சகடத்தை உகைப்பவன் உகைக்குந் திறத்தை மாண்புற
அறிந்தானாயின், அஃது இடையூறு சிறிதுமின்றி இனிது செல்லும்; அத்திறம்
அறியானாயின், நெறியல்லா நெறியிற் சென்று சேற்றில் அழுந்தி மிக்க
துன்பத்துக் குள்ளாவன்; அவ்வாறே அரசியலை நடத்தும் வேந்தன் அரசியல்
முறையைத் திறம் பட அறிந்தானாதல் வேண்டும்; அதனால் நாடு நலம்
பெறும்; அவனும் சீர்பெறுவான்; அறியானாயின் உட்பகை புறப்பகைகளாகிய
சேற்றில் அழுந்திக் கெடுவன்”என்று அறிவுறுத்துள்ளான்.

 கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகா டுகைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே
உய்த்த றேற்றா னாயின் வைகலும்
5பகைக்கூ ழள்ளற் பட்டு
 மிகப்பஃறீநோய் தலைத்தலைத் தருமே.  (185)

     திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.

    உரை: கால் பார் கோத்து - உருளையையும் பாரையும் கோத்து;
ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு - உலகின் கண்ணே செலுத்தும்
காப்புடைய சகடந்தான்; உகைப்போன் மாணின் - அதனைச்
செலுத்து வோன் மாட்சிமைப்படின்; ஊறு இன்றாகி ஆறு இனிது
படும் - ஊறு பாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும்; உய்த்தல்
தேற்றானாயின்- அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத்
தெளியமாட்டானாயின்;