பக்கம் எண் :

406

 

நலமுறுதலும் இலனாயின் கெடுதலும் ஒருதலை என்றனர் ஒருசாரார்.
உடம்பின் நலத்துக்கு நெல்லும் நீரும் ஏதுவாம்; அவை யுள்வழியே
உயிண்மையும் அரசுண்மையும் காணலாம். ஆகவே, நெல்லும் நீரும்
உலகிற்குஉயிராவன என்றனர் பிறிதொரு சாரார். இவ்வாறு நாட்டிற்கு
அரசே உயிரென்பாரும் பொருளே உயிரென்பாரும் சான்றோர்
இருதிறத்தராகவே ஆங்கிருந்த மோசி கீரனார், “நாடாளும் வேந்தனாவான்,
இவ்வுலகிற்கு யானே உயிர்; ஏனை நெல்லுமன்று; நீருமன்று என்பதை
அறிந்தொழுகும் அரசுமுறை உயிர் நிலையாம்”என்ற கருத்துப்பட இப்
பாட்டினைப் பாடிக் காட்டினார்.

 நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால், யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.  
(184)

     திணையுந் துறையு மவை. மோசி கீரனார் பாடியது.

     உரை: மன்னன் உயிர்த்து மலர்தலை உலகம் -
வேந்தனாகிய உயிரை யுடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்;
அதனால்-; நெல்லும்  உயிரன்று - இவ் வுலகத்தார்க்கு நெல்லும்
உயிரன்று; நீரும் உயிர் அன்று - யான் உயிர் என்பது அறிகை -
யான் உயிரென்பதனை யறிகை; வேல் மிகு தானை வேந்தற்குக்
கடன் - வேலான் மிக்க படையையுடைய அரசனுக்கு முறைமை
எ-று.

     மன்னன் உயிர்த்தென்ற கருத்து: உயிரை யாக்கும் நெல்லும்
நீரும் உளவாவது மன்னன் முறைசெய்து காப்பின் என்றதாம்.

     விளக்கம்: “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உயிரும் உடம்பும்
படைத் திசினோர்”(புறம். 18) எனச் சான்றோர் கூறுதலால், “நெல்லும்
உயிரன்று நீரும் உயிரன்று”என்றார். உயிரும் உடம்பும் கூடி நின்ற வழியும்,
உயிர்க்குயிராய் நின்றியக்கும் திருவருள்போல அரசு முறை
இன்றியமையாதமையின், அதனைச் செலுத்தும் தானே உலகிற்கு உயிராதலை
யறிந்து, உயிர் தானின்ற உடம்புக்குளதாகும் நோயைத் தான் நுகர்ந்தும்
அதனைப் பேணுதல்போல, உலகு புரத்தற்கண் உள்ள துன்பமனைத்தையும்,
தானேற்று அதனைக் காப்பது கடன் என்பார், “யானுயி ரென்ப தறிகை
கடன்”என்றார். “இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்,
உழத்தொறூஉம் காதற்றுயிர்”(குறள்.940) எனச் சான்றோர் கூறுதலால்
உயிரது செயல் நலம் தெளியப்படும். திருத்தக்கதேவர் இக் கருத்தை,
“நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பிற், புல்லுயிர்
புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை, மல்லலங் களிற்று மாலை
வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி
என்றான்”(2908) எனக் கூறுவர்.