| 187. ஒளவையார் நிலத்தின் நீர் நில வளங்கட்கேற்ப அந் நிலத்து வாழும் மக்கட்குப்பண்பும் செயலும் இயைபு படுகின்றன; நாட்டவர்க்கு அவ்வக் காலங்களில் செய்வன செய்து, பெறுவன பெற்றுக் கல்வி கேள்விகளில் மேம்படும் நலமும் காட்டவர்க்கு வேட்டம் புரிவதே பொதுச் செயலாதலின், தறுகண்மை போர்ச்செயல் வண்மைகளில் மேம்படு நலமும், பள்ளத்தில் வாழ்பவர்க்கு நீர்வளம் வாய்த்தலாற் பொருள் மிக வுண்டாதலின் ஈதல் மனப்பான்மையும், மேட்டு நிலத்தவர்க்குச் செட்டும் சிக்கனமுமா யிருக்கும் திறமுமாகிய நலங்களும் உண்டாகின்ற எனும் நிலநூல் வழக்கு, ஒருகால் ஒளவையார் ஆராய்ச்சிக்கு வந்தது. நாடும் காடும் அவலும் மிசையுமென்ற பாகுபாடு நிலத்தின்கட் காணப்படுதல்போல நிலத்து வாழும் மக்களிடையே ஆண்களும் பெண்களும் இளையரும் முதியருமென்ற பாகுபாடு தோன்றக் கண்டார். இவருள் ஆண்மையும் இளமையும் சிறக்கும் ஆடவர் நல்லராய வழி யாவரும் நலமுடையராதலும், அவரால் நாடுகள் நல்லிசை பெறுதலும் கண்டு, நிலமே, நின்பால் எவ்வழி ஆடவர் நற்பண்பும் நற்செயலுமுடையராய் விளங்குகின்றனரோ, அவ்வழி நின்னை நன்னாடெனச் சான்றோர் பாராட்டுகின்றனர்; காண்என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடினார்.
| நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே. (187) |
திணையும் துறையு மவை. ஒளவையார் பாடியது.
உரை: நிலனே-; நாடாக ஒன்றோ - நீ ஒன்றில் நாடேயாக; காடாக ஒன்றோ - ஒன்றிற் காடேயாக; அவலாக ஒன்றோ - ஒன்றிற் பள்ளமேயாக; மிசையாக ஒன்றோ - ஒன்றில் மேடேயாக; எவ்வழி நல்லவர் ஆடவர் - எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர் ஆண் மக்கள்; அவ்வழி நல்லை வாழி - அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி எ-று.
தீய நிலனே யாயினும் நல்லோருறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோ ருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வாரியல்பல்லது தனக்கென ஓரியல்புடைய தன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவாறாயிற்று. ஒன்றோ வென்பது எண்ணிடைச் சொல்.
விளக்கம்: ஆக வென்பது நான்கு இடத்தும் கடைக்குறைந்து முடிந்தது.நற்பண்பும் நற்செயலுமுடையாரை நல்லர்என்றார். ஆடவன், இளமைச் செவ்வி நிரம்பினானை ஆடவனென்றல் இயல்பு. வாழ்விற் பெறற்குரிய நலமுற்றும் பெறுதற்குரிய செவ்வி இளமை; அதனால் இளமையிற் சிறந்த வளமையு மில்லைஎன்ப சான்றோர். அவ் வளமைக்குச்சிறப்பு |