| யுடையோராயினும்; இடைப் பட - இடையே யுண்டாக; குறு குறு நடந்து - குறுகக் குறுக நடந்து சென்று; சிறு கை நீட்டி - சிறிய கையை நீட்டி; இட்டும் - கலந்தின்கட் கிடந்ததனைத் தரையிலே யிட்டும்; தொட்டும் - கூடப்பிசைந்து தோண்டியும்; கவ்வியும் - வாயாற் கவ்வியும்; துழந்தும் - கையால் துழாவியும்; நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் - நெய்யை யுடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும்; மயக்குறும் மக்களை இல்லோர்க்கு - இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இயல்லாதார்க்கு; பயக் குறை இல்லை - பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை; தாம் வாழும் நாள் - தாம் உயிர் வாழும் நாளின்கண் எ-று.
தொட்டென்பதற்குக் கூட வாரிப் பிடித்தெனினு மமையும். குறையென்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் பொருள். இனிப் பயக்குறையுள்ளதென ஒருசொல் வருவித்துத் தாம் வாழும் நாளும் இல்லை யென்று கூறுவாரு முளர்.
விளக்கம்: படைப்பு, படைக்கப்படும் செல்வம்; வாழிய பெரும நின் வரம்பில் படைப்பு(புறம்.22) என்றார் பிறரும். பலரோ டுண்ணும் செல்வர், உடைப்பெருஞ் செல்வர் என இயையும். பெருமை, மிகுதி குறித்தலின், உடைப்பெருஞ் செல்வ ரென்றதற்கு உடைமை மிக்க செல்வரென்றார். மயங்குவது அறிவாகலானும், மக்கள் மயக்கத்தைத் தரும் பொருளாகாமையாலும், மயக்குறு மக்க ளென்றதற்கு அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வ ரென்றார். குறை இன்றியமையாப் பொருள். மக்களை யில்லோர்க்குப் பயன் குறைவாகவே யுளது; வாழும் நாளும் இல்லை என்று உரை கூறுதலு முண்மையின், இனி.....கூறுவாரு முளரென்றார். 189. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் கணக்காயனாருடைய இயற்பெயர் தெரிந்திலது. மதுரையில் அக்காலத்தில் சிறந்த ஆசிரியராக இருந்து பலர்க்கு அரிய நூல்களை ஓதுவித்த சிறப்பால் இவர் கணக்காயனாரென்றே வழங்கப்பட்டனர். இவருடைய மகனார் நக்கீரனாராவர். இவர் காலத்துப் புலவர்களுள் இவர் தலைமைப் புலவராய் விளங்கினது கொண்டே தந்தைய ரொப்பர் மக்களென் பதனால்(தொல். கற்பு: 6) இவரின் தந்தையாரின் சிறப்பு இனிதுணரப்படும். நக்கீரனார்க்குக் கீரங்கொற்றனாரென்பவர் மகனாராவர்.
இந் நக்கீரனார், பொதுவாகத் தமிழ் மூவேந்தரையும் வேண்டுமிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும் சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும் பரிசில் பெற்றவர்; முருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறக்கப் பெற்றவர். தமிழகம் முழுவதையும் நன்கறிந்தவர். இவர் அந்தணரல்லர்.
|