பக்கம் எண் :

410

 

     இத்துணைச் சிறப்புடைய புலமை சிறந்த நக்கீரனார் மலையும் காடும்
நாடும் கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும்  மக்கள் பலருடைய முயற்சி
முற்றும் தம் புலமைக்கண்ணால் நோக்கினார்.எல்லாருடைய உள்ளமும்
பொருளீட்டற்கண் பேரார்வமுற்று  இயங்குவது  தெரிந்தது. நாடுகட்குத்
தலைமை  தாங்கிய  வேந்தர்  பொதுச்சொற் பொறாது  அரசு  புரிவதும்,
காடுகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் வேட்டுவர்
இரவும் பகலும் தமக்குரிய  விலங்குகளைப்  படுப்பதையே எண்ணி
முயல்வதும் நக்கீரர் கருத்தை  யீர்த்தன.  இவரது உழைப்பின்
முடிவென்னை யென்று ஆராய்ந்தார். இவரனைவர்க்கும்  வேண்டுவன
உண்டியும் உடையுமே யென்றும், அவற்றுள் உன்பது  நாழியும் உடுப்பவை
இரண்டுமாமென்றும், பிறவகையில்  ஒரு  வேற்றுமையு மில்லையென்றும்
துணிந்தார். இவற்றை நோக்கின், வேண்டுவன சிறிதும் ஈட்டுவன பெரிது
மாதலின், மிக்கு நிற்கும் செல்வத்தால்  செய்ய வேண்டுவது ஈதலாகிய
அறமே என்றும், செய்யாது தாமே துய்க்கக் கருதின் அறமும் பொருளும்
இன்பங்களும் பெறப்படாவாம் என்றும்  கண்டார்.  இக்   கருத்துக்களை
இப்பாட்டின்கண் வைத்துப் பாடியுள்ளார்.

 தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
5உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
 பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே.
   (189)

     திணையும் துறையு மவை. மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் பாடியது.

     உரை: தெண் கடல் வளாகம் - தெளிந்த நீராற் சூழப்பட்ட
உலக  முழுதையும்; பொதுமை  யின்றி - பிற வேந்தர்க்குப்
பொதுவாதலின்றித்  தமக்கே யுரித்தாக  ஆண்டு; வெண் குடை
நிழற்றிய ஒருமையோர்க்கும் - வெண்கொற்றக் குடையால் நிழல்
செய்த ஒரு தன்மையை யுடையோர்க்கும்; நடு நாள் யாமத்தும்
பகலும்  துஞ்சான் இடை யாமத்தும் நண்பகலும் துயிலானாய்;
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் - விரைந்த செலவையுடைய
மாக்களைப் படுக்கக் கருதிச் செல்லும் கல்வியில்லாத ஒருவனுக்கும்;
உண்பது நாழி - உண்ணப்படும் பொருள் நாழி; உடுப்பவை இரண்டே
- உடுக்கப்படுமவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக்கும் - பிறவு
மெல்லாம் ஒக்குமாதலால்; செல்வத்துப் பயன் ஈதல் - செல்வத்தாற்
பெறும் பயனாவது கொடுத்தல்; துய்ப்பேம் எனின் தப்புந பல -
செல்வத்தை யாமே நுகர்வே மென்று கருதின் தவறுவன பல எ-று.