| பல வென்றது, அறம் பொருள் இன்பங்களை. பகலை யொரு மாத்திரை யென்றும், கடுமாவை யானை யென்றும், கல்லாத ஒருவனைப் பாகனென்றும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: கொண்ட கொள்கையில் ஒருமை யுணர்வும், அதற்கு வேண்டும் செயற்பண்பும் இல்வழி, அதனாற் பெருமை யுண்டாகா மையால் ஒருமையோர் என்றார்; ஒருமை மகளிரே போலப் பெருமையும், தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு(குறள். 974) என்ப. அரைக்கு நான்கு முழமும், மேலுக்கு இரண்டு முழமுமாக இரண்டாடை வேண்டுதலால், உடுப்பவை இரண்டேஎன்றார். உண்டல், உறங்கல், இனம்பெருக்குதல் முதலியன பிறவும்என்பதனுள் அடங்கும் ஓரொக்கும் என்புழி, ஓர் என்பது அசைநிலை. உயிர்கட் குறுதிப்பொருளென உயர்ந்தோரால் எடுத்துள்ள அறமும் பொருளும் இன்பமும் பலவெனப்பட்டன. பகலில் உறங்குதல் கூடாதாகலின், அதற்கு ஒரு மாத்திரை யென்று கொண்டு, நள்ளிரவிலும் ஒரு மாத்திரை யளவும் தூங்கான்என்பாரு முளர். கடுமாப் பார்க்கும் ஒருவனென்றது, அவ் வேந்தனுடைய யானைப்பாகனைக் குறித்ததாக வுரைப்பதும் உண்டு. உரைப்பவே, அரசனையும் அவன் அடிப்பணி புரியும் எளிய பணியாளையும் நோக்கின், இருதிறத்தாரும் உண்டியுடை வகையில் ஒப்பரென்பது கண்டவாறாம். பெரிதீட்டித் தமித்துண்பவர்பால் செல்வம் மிகுதலால், அம் மிகுதிக் காட்சி சிறிதீட்டிப் பலர் சூழ இருந்துண்பவராகிய வறியார்க்கு, அறிவு நலம் கேடெய்துவதற்கு ஏதுவாகிறது. அதுவே, செல்வர்க்கும் எளியோர்க்கும் இடையே ஒற்றுமை நிலைபெறாவாறு, தீய கருத்தும் செயலும் பிறப்பிக்கிறது. அதனால், செல்வர் வறியராகிய எல்லாருடைய வாழ்வும் பொருட்குறையுற்று, அறமும் இன்பமும் குன்றிச் சீரழிவது ஒருதலை என்பதுபற்றி, தப்புந பலவென்றா ரென்றறிக. இதனால், செல்வர் ஈதலைக் கடனாகக் கோடல் அறனாம் என்றும், அஃது அவர்கட்கே யன்றி, மக்களுலகுக்கே நலம் பயப்பதாம் என்றும் துணிபாம். இந்த அற வுணர்வுக் குறைவே இக்காலத்தொழிலாளர் கிளர்ச்சிக்கும், பொருள் முட்டுப் பாட்டுக்கும், வாழ்வு நிரம்பாமைக்கும் வாயிலாதல் தெற்றெனத் தெளியப்படும்.
190. சோழன் நல்லுருத்திரன் சோழன் நல்லுருத்திரன் என்பான், சங்கநூற் காலத்துச் சோழ வேந்தர்களுள் காலத்தாற் பிற்பட்டவனென்பதை இவன் பெயரே நன்கு தெரிவிக்கின்றது. ஆயினும், இவன் உயர்ந்த உள்ளமும் பரந்த கல்வி கேள்வியும் சிறந்த வினைத்திட்பமும் கொண்டவன். முடி வேந்தனாகலின், எப்போழ்தும் இவனைக் குறுநில மன்னரும் செல்வ மக்களும் சூழ்ந்து கொண்டே யிருப்பர். இவர்களின் துணைகொண்டு இவன் அரிய செயல்கள் பல செய்து மிக்க பொருளும் நல்ல புகழும் பெற்றான். இச் செயல்களைச் செய்யுமிடத்துத் தனக்குத் துணையாயிருந்த மன்னரும் செல்வருமாகிய சுற்றத்தாரின் குணஞ் செயல்களைப் பயின்று அறியும் வாய்ப்பு இவனுக்குச் சிறப்புற அமைந்தது. அவருள் சிலருடைய கூட்டுறவால் ஆக்கமும், வேறு சிலருடைய துணையால் கேடுமுண்டாகக் கண்டு அவர்களை யாராய்ந்தான். ஆக்கத்திற்குத் துணையாயிருந்தவர் உயர்ந்த உள்ளமும், தாம் மேற்கொண்டு கடைப்பிடிக்கும் அறக் கொள்கையின் வழுவா தொழுகும் மனத் திட்பமும், |