| 193. ஓரே ருழவர் ஓரே ருழவரது இயற்பெயர் தெரிந்திலது. தேர்கொண்டு சென்ற வினையை முடித்த தலைமகனொருவன், வினைமுடிவில் விளையும் இன்பத்தினும் மிக்க இன்பந்தரவல்ல தன் காதலியை நினைந்து மீளலுற்றான். தன்னைப் பிரிந்து வருந்தியுறையும் காதலியின் ஆற்றாமையையும் விரைந்து சென்று அவனைக் காண்டற்குப் பெருவிழைவு கொண்டிருக்கும் தன் வேட்கை யுள்ளத்தையும் மனக் கண்டு ஆற்றானாய்த் தன் பாகனை நோக்கிக் கூறுங் கருத்தால் இவர் ஒரு பாட்டுப் பாடியுள்ளார். தன் காதலியிருக்கும் ஊர் நெடுந் தொலைவி லிருப்பதென்பதை, ஆடமைபுரையும் வனப்பின் பணைத்தோள், பேரமர்க் கண்ணி இருந்த ஊர்,நெடுஞ்சே ணாரிடை யதுவேஎன்றும், அந் நெடுஞ்சேண் ஆரிடையை விரையக் கடந்து சென்று பணைத்தேழளும் அமர்க்கண்ணுமுடைய காதலியை யடைதற்குத் துள்ளித் துடிக்கும் நெஞ்சின் நிலையை, நெஞ்சே! ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து, ஓரே ருழவன் போலப், பெருவிதுப்புற் றன்றால், நோகோயானே(குறுந். 131) என்றும் பாடினார். இதன்கண் வினைமுடித்து மீளும் காதற் றலைமகன் தன் காதலியைக் கூடற்கு விரைந்து துள்ளித் துடிக்கும் நெஞ்சின் இயல்பு சொல்லப்படுகிறது. ஈரம் பட்ட செவ்வி வாய்ப்பக் கண்ட உழவன் அச்செவ்வி நீங்குதற்குள் உழுது வித்தற்கு விரைகின்றான்; அவன்பால் உள்ளது ஓ ரேரே; அதனால் அவன் நெஞ்சு துடிக்கிறது. அத்துடிப்பினைத் தலைமகன் நெஞ்சத் துடிப்புக்குவமை கூறிய சிறப்பால் இவரைச் சான்றோர் ஓரே ருழவரென்றே அழைப்பாராயினர்.
இச் சான்றோர், இல்வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலமாதலை நன்குணர்ந்தார்; வாழ்விலும் இன்பப் பகுதியினும் துன்பப் பகுதியே மிக்கிருப்பதும் கண்டார்; இன்பமும் துன்பமும் நண்பகலும் இரவும் போல மாறிமாறி வேறுவேறியல்பினவாய் வந்த வண்ணமாய் இருப்பதும் புலனாகாமல் இல்லை. மனைவி மக்களும் ஒக்கலும் பிறரும் தம்மை இன்றியமையாராதலையும் அறிந்தார். துன்பம் வந்துசுடச்சுடத் தாக்குங் காலத்தில், அவரது உள்ளம் துறவு பூண்டு தாபத நெறியிற் சென்று விடலாமா வென எண்ணத் தொடங்கிற்று. சென்றொழிந்தால் தம்மைச் சார்ந்திருக்கும் பலர் வருந்த நேருமென்ற கவலை ஒருபால் வருத்திற்று. ஒக்கலும் மக்களுமாய் வாழும் வாழ்வின் இன்பம் புலனாயிற்று. அவ் வின்ப வாழ்வும் நன்னெறியே யென்பது நினைவிற்கு வந்தது. ஒக்கல் வாழ்க்கை யில்லார்க்கே துறவும் தாபத வொழுக்கும் தகும்; அதனையுடையார் அந்நெறியில் ஓடிச் சென்று உய்தல் என்பது கூடாது; அஃது அவர்கள் காலைக் கட்டிச் செல்லவொட்டாமல் தடுக்கும் என்ற கருத்துப்பட இப்பாட்டைப் பாடியுள்ளார்.
| அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ னாட்டும் புல்வாய் போல ஓடி யுய்தலுங் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (193) |
திணையும் துறையு மவை. ஓரே ருழவர் பாட்டு. |