பக்கம் எண் :

418

 

     உரை: அதள் எறிந் தன்ன - தோலைப் புடைத்து வைத்தாற்
போன்ற; நெடு வெண் களரின் - நெடிய வெளிய களரின் கண்;
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல - ஒருவன் அலைக்கும் புலவாய்
ஓடிப் பிழைக்குமாறு போல; ஓடி உய்தலும் கூடும் மன் - யானும்
நன்னெறிக் கண்ணே யொழுகிப் பிழைக்கவும் கூடும்; ஒக்கல்
வாழ்க்கை - சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை; கால் தட்கும்
-அதன்கட் செல்லவொட்டாது காலைத் தளையா நிற்கும் ஆதலான்
உய்தல் கூடாது எ-று.

     மன், கழிவின்கண் வந்தது. மா: அசைநிலை.

     விளக்கம்: தோலைப் புடைத்துவைத்தலாவது, தோலையுரித்து அதனை
மேல்  கீழாகத்  திருப்பி வைத்தல்.  ஆட்டுதல், அலைத்தல். “முள்ளி
வேரளைக் கள்வனாட்டிப், பூக்குற் றெய்திய புனல்”(ஐங். 23) என்றாற்போல.
புல்வாய் - மான்.  களரில் நின்ற மான் தன்னைத் துரத்தும் ஒருவன், தான்
வழுக்கி வீழ்தற் கிடமுண்மையின், “ஓடியுய்தல் கூடும”என்றார். நன்னெறி
களர்போல்வ தென்றது, ஒக்கல் வாழ்க்கை செல்லவொட்டாது தடுக்கும்
சேறம்  வழுக்குப்  பகுதியுமாத்தளைத்தலின்  எவ்வகையாலும் தன்னை
இன்றியமையாத மனைவாழ்வே ஒருவனுக்கு ஒக்கல் வாழ்க்கை யாதலால்,
அதனை எடுத்தோதினார். இப் பாட்டின்கண் ஆசிரியர், தான் இல்வழி
தாங்குவாரின்றிக் கெட்டுத் தலைத்தலைச் சிதறியோடி, அறமும் பொருளும்
இன்பமும் பெறும் வகைகெட்டு அழியத்தக்க மனைவாழ்க்கையில்
இருப்போனே உய்தல் கூடாத இயல்பினன் என்று குறிக்கப்படுகின்றான்.
ஆசிரியர் தொல்காப்பியர் “காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ்
சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்,
சிறந்தது  பயிற்றல்  இறந்ததன் பயனே”என்றதும் இக் கருத்தையே
வற்புறுத்துவதை அறிந்து கொள்க. இக் கருத்தையே திருத்தக்கதேவர்,
“காட்டகத் தொருமகன் துரக்கு மாக்கலை, ஓட்டுடைத் தாமெனின் உய்யும்
நங்களை, ஆட்டியி டாருயிர் அளைந்து கூற்றுவன், ஈட்டிய விளைமதுப்
போல உண்ணுமே”(சீவக.1919) என்றார்.

                    194. பக்குடுக்கை நன்கணியார்

      இந் நன்கணியார்  பெயரை யடுத்துச்  சிறப்பிக்கும்  பக்குடுக்கை
யென்பது இவரது ஊர்ப் பெயராகவும் என்றும், பக்கு  என்பது பையென்னும்
பொருள் படுதலின்; இவர் பையையே உடையாக வுடுப்பவரென்றும் அறிஞர்
கருதுகின்றனர். ஒருவருக்கு உடுப்பவை இரண்டாக வேண்டி யிருப்பவும்,
ஒன்றையே    இரண்டாகப்   பகுத்துடுக்கும்  காரணத்தால்   பக்குடுக்கை
நன்கணியா  ரெனப்பட்டா   ரென்றற்கும்,   ஒருவரது   வறுமை நிலையைப்
பக்குடுக்கை  யெனச் சிறப்பித்துரைத்த நலம் கண்டு, சான்றோர் இவரை
இவ்வாறு  சிறப்பித்துப்   பாராட்டினர்   என்றற்கும் இடனுண்டு. நன்கணி
யென்பது இவர தியற்பெயர்.

      இவர் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தர்கட்கும் ஏனைச் செல்வர்
கட்கும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, “மெய்வலி யுடையார்க்கே
இவ்வுலகம் உரியது; உலகத்திற் பிறந்தா ரனைவர்க்கும் பொதுவென்பது.