பக்கம் எண் :

420

 

     விளக்கம்: மணவொலி  கேட்பார்க்கு  இன்பமும்   குளிர்ச்சியும்
பயப்பதாகலின், “ஈர்ந்தண் முழவின் பாணி”யென்றார். பாணி, ஈண்டு இனிய
ஓசை  யென்னும்   பொருளதாயிற்று.  நெய்தற்  பறைகேட்டார்க்கு
வருத்தம் பயத்தலின்,   வாளா  நெய்தலென்  றொழிந்தார்.  படைத்தான்
என்ற வினைமுற்றின் ஈற்றயலாகாரம் செய்யுளாகலின் ஓகாரமாயிற்று.
‘பிறப்பொக்கும்எல்லா  வுயிர்க்கும்’  என்பது  பற்றி,   எல்லார்க்கும்  
ஒரு  தன்மைப்பட அமைக்காது  வேறுபட  வமைத்தமையின்
நான்முகனைப் “பண்பிலாளன்”என்றார். சுட்டு, உலகறி சுட்டு.

                     195. நரிவெரூஉத்தலையார்

     நரிவெரூஉத்தலையார்  ஆழ்ந்த  புலமை  யுள்ளம்   படைத்த
சான்றோராவர். இன்பம் துன்பம் என்ற இருவகைக் காட்சிகளையும் ஆழ்ந்து
நுணுகிச் சென்று அகன்று ஓங்கும் அறிவுநெறி இவர்பால் நன்கமைந்துளது.
காதலன் பிரிந்தானாக, அப்பிரிவுத் துன்பத்தை யாற்றாத தலை மகளைக்
கண்ட தோழி, “மெல்லிய இயல்பினையுடைய இவள், இதனை ஆற்றுவளோ”
எனத் தனக்குள்ளே யெண்ணிக் கலங்கினாள். தலை மகளோ, அதனைக்
குறிப்பால் அறிந்துகொண்டாள். காதலன் தனக்குரிய கடமை குறித்துப்
பிரிந்துள்ளான்; காலினும் கடமை பெரிது; அதுகுறித்து ஆற்றுதல் கற்புடைய
மகட்குக் கடன் என்பதை நன்குணர்ந்தாள். தன் கற்புமாண் பறியாத
தோழிக்கு அதனைக் கூறுதல் நன்றன்றெனக் கொண்டாள். காதற்காமத்
துறைக்கண் பிரிவுபற்றி நிகழும் துன்பத்தை யறியாள் போலப் பேசலுற்று,
“தலைவன் பிரிந்தானாக, என் கண்கள் உறங்காவாயின; இதுதான்
காமநோய் என்பதோ?”என்பதுபட, “மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்,
பல்லித முண்கண்பாடொல் லாவே........அதுகொல் தோழி காம நோயே”
(குறுந். 5) என்றா ளெனப் பாடிக்காட்டுகின்றார். தலைமக னொருவன்
தான் காதலித்த தலைவியை மணப்பதற்கிடையே பிரிந்து செல்ல வேண்டிய
கடமை யுண்டாகிறது. அவன் தோழியை நோக்கி, “யான் வருந்துணையும்
இவளைப் பாதுகாப்பாயாக”என்கின்றான். அவற்குத் தோழி, “நீ இவளை
விட்டுப் பிரிந்தே மெனக் கைவிட்டுப் பிரியுநாள் வரட்டும்; அப்போதுதானே
இது கூறல் வேண்டுவது”என்றாள்; தலைமகன் அது கேட்டு வருந்தினான்;
“தலைவ, நீ உண்மையாகவே வருந்தினாயாயின் ஒன்று செய்; நீ இவள்பால்
நுகர்ந்த நலம் உண்டன்றோ? அதனைத் தந்துவிட்டுச் செல்”என
நகையாடுவாளாய், “விட்டென விடுக்குநாள் வருக, அது நீ, உண்ட என்
நலனே”(குறுந். 236) என்றாளெனக் கூறுகின்றார். இவ்வாறு இரண்டு
பாட்டுக்களாலும், தலைவி, தோழி யென்ற இருவருடைய மனமாண்புகளை
ஆழ அகழ்ந்தெடுத்துக் காட்டும் இந்நரிவெரூஉத்தலையாரது புலமை நலத்தை
ஒருவாறு காணலாம்.

     சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும்பொறையைக்
கண்டு தம்முடம்பு நலமுறப் பெற்ற இவர், இவ்வாறு தமக்கு நலஞ் செய்த
அவனது தோற்றச் சிறப்புக் கெடாது நிலைபெறுமாறு கூறிய புலமை யுரையை
‘எருமை யன்ன”(புறம்.5) எனத் தொடங்கும் புறப்பாட்டிற் கண்டோம்.