| இப்பாட்டின்கண், இவர் காலத்துச் சான்றோர்சிலர் பரிசிற்றுறையிலும் அகத்துறையிலும் தம் புலமை வளத்தையும், போர்த்துறையில் மெய் வளத்தையும் பயன்படுத்தக் கண்டு நன்னெறிக்கண் பயன்படுத்துமாறு அறிவுறுத்த முற்பட்டு, நரைத்து முதிர்ந்த சான்றீரே,கூற்றுவன் போந்து நும் முயிரைப் பற்றுங்கால் நீவிர் வருந்துவீர்கள்; உங்களால் மக்கட்கு நல்லது செய்தல் இயலாதாயின், அவர்கட்குத் துன்பம் விளைக்கும் துறையில் வேந்தர்களையும் பிறரையும் ஊக்குதலாகிய அல்லது செய்தலை ஒழியின்; அதுவே எல்லார்க்கும் உவப்பைத் தருவது; நன்னெறியுமாவதுஎனத் தெருட்டியுள்ளார்.
| பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் | 5 | பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே. (195) |
திணை: அது. துறை: பொருண்மொழிக்காட்சி. நரிவெரூஉத்தலை யார் பாடியது.
உரை: பல் சான்றீரே பல் சான்றீரே - பல அமைந்த குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்கை யுடையீர்; கயல் முள் ளன்ன நரை முதிர் திரை கவுள் - கயலினது முட்போன்ற நரை முதிர்ந்த திரைந்த கதுப்பினையும்; பயனில் மூப்பின் - பயனில்லாத முதுமையையுமுடைய; பல் சான்றீர் - பல அமைந்த குணங்களை யுடையீர்; கணிச்சிக் கூர்ப்படை கடுந்திறல் ஒருவன் - மழுவாகிய கூரிய படைக்கலத்தினையும் கடிய வலியினையுமுடைய ஒருவன்; பிணிக்குங் காலை இரங்குவிர் - பாசத்தாற் கட்டிக் கொண்டு போங்காலத்து இரங்குவீர் நீர்; நல்லது செய்தல் ஆற்றீராயினும் - நல்வினையைச் செய்யமாட்டீராயினும்; அல்லது செய்தல் ஓம்புமின் - தீவினையைச் செய்தலைப் பரிகரிமின்; அதுதான் எல்லாரும் உவப்பது - அதுதான் யாவரும் புகழ்வ ரென்றது; அன்றியும் - ஒழியவும்; நல்லாற்றுப் படூஉம் நெறியும் அது - நல்ல நெறியின் கண்ணே செலுத்தும் வழியும் அதுதான் எ-று.
பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது; பல்குட்டுவர் (மதுரைக்.105) என்பதுபோல. பலவாகிய குணங்களால் அமைந்தீர் எனினு மமையும். பயனின் மூப்பென்று வைத்துப் பல் சான்றீரே யென்றது, இகழ்ச்சிக்குறிப்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது.
|