பக்கம் எண் :

422

 

     விளக்கம்: கயல் முள் - கயல் மீனினுடைய முள். நன்னெறிக் கண்
வாழ்நாள் கழியாமையின், “பயனில் மூப்பு”என்றார். வெல்லற் கருமைபற்றிக்
கூற்றுவனைக் “கடுந்திற லொருவன்”என்றார். கயிற்றாற் கட்டி உயிரை
யீர்த்துச் செல்வ னென்ப வாகலின், “பிணிக்குங் காலை”யென்றார். நல்லது
செய்தலினும், தீயது செய்யாமை துன்பம் இல்லாதிருத்தற் கேதுவாகலின்,
“அல்லது செய்த லோம்புமின்”என்றும், தீயவை தீய பயத்தலால், அவை
தீயினும் அஞ்சப்படுதலின், தீயதென வாயாற் சொல்லற்கும் விரும்பாது
“அல்லது”என்றும் கூறினார். நல்லது செய்தலினும் தீயது செய்யாமை
எல்லார்க்கும் எளிதின் இயைவதுபற்றி, “எல்லாரும் உவப்பது”என்றும்,
நல்லது செய்து நலம் பெறுதற்குரிய நன்னெறியு மதுவாகலின், “நல்லாற்றுப்
படூஉம் நெறியு மாரதுவே”யென்றும் வற்புறுத்தினார்.

196. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

     பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டி
நாட்டிலிருந்து அரசுபுரிந்து வருகையில், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளி வளவன் முதலிய பேரரசர்களைப் பாடி அவர்கள் தந்த பரிசில்
பெற்றுச் சிறப்புற்றிருந்த ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இந்த
நன்மாறனுடைய மேம்பாட்டைக் கேள்வியுற்று இவன்பால் வந்தார். இவன்
மதுரை மருதனிளநாகரால், “கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்,
பிறைநுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற”
னென்று பாராட்டவும், மதுரைக் கணக்காயனார் மகனாரால்,
மணிமிடற்றோனும், பனைக்கொடியோனும், திருமாலும், முருகனும் என்ற
“ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்லிசை நால்வ”ரையும்
ஒவ்வோராற்றலின் ஒத்தலின்,  இப்  பாண்டியற்கு “அரியவும் உளவோ?”
என வியந்து,  “வெங்கதிர்ச்  செல்வன்  போலவும் குடதிசைத் தண்கதிர்
மதியம் போலவும்,  நின்று நிலைஇயர் உலகமோ டுடனே”என வாழ்த்தவும்,
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரால், “இமிழ் குரல் முரச மூன்றுட
னாளும்,   தமிழ்கெழு  கூடல் தண்கோல் வேந்”தெனச்  சிறப்பிக்கவும்
பெற்றிருத்தலின்,   இவனைக்  காண்பதில்  ஆவூர்  மூலங்கிழார்க்கு
விருப்பமுண்டாவதாயிற்று. அக்காலை மூலங்கிழார்க்கு வறுமைத் துன்பமும்
வந்து பொருந்தியிருந்தது. இந்நிலையில்  இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய
நன்மாறன் இவர்க்குச் செவ்வி கொடானாயினன். செவ்வி பெறுதல் வேண்டிச்
சின்னாள் தங்கினார். செவ்வி  பெற்றுத்  தமது  புலமை  நலத்தையும்
தோற்றுவித்தார்.  ஓரொருகால்,   அவரைச்  சிறப்பிக்கக் கருதினான்போல
நன்மாறனும் நடந்துகொண்டானே யன்றிப் பரிசில் நல்கினானின்லை. ஆவூர்
மூலங்கிழார்க்கு  உள்ளத்தே அடங்காத   வெம்மை  யுண்டாயிற்று. அது
பொங்கி வெளியே ஒரு பாட்டாய் வெளிவந்தது. அந்த இப்பாட்டின்கண்,
“வேந்தே, இயல்வதனை இயலுமெனச் சொல்லி யீதலும், இயலாததனை
இயலாதெனச் சொல்லி விடுதலும், தாளாண் மையுடையார்க்குரிய
நற்செயல்களாம். இயலாததை இயலு மென்றலும், இயல்வதனை யியலா
தென்றலும் இரப்போரை யேமாற்றும் புகழைக் கெடுத்துக்கொள்ளும்
செயல்களாகும். இரப்போராகிய எமது வாழ்வில் இக் குறைபடும் செயல்கள்
புரவலாபால் உளவாதலை இதுகாறும் கண்டதில்லை; இப்போதே கண்டோம்.
வேந்தே, நின் வாழ்நாள் சிறக்க; நின்புதல்வர் நோயிலராகுக;