பக்கம் எண் :

423

 

பனி  யென்றும் வெயிலென்றும் பாரேன்; கற்புடை என் மனைவியை
நினைந்து  யான்  செல்கின்றேன்” என்ற  கருத்தைப்  புலப்படுத்தினார்.
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனும், தவற்றுக்கிரங்கி அவர்க்கு
வேண்டுவன நல்கிவிடுத்தான்.

 ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும்
ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும்
ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே
ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ
5தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே
 இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயி லத்தை
அனைத்தா கியரினி யிதுவே யெனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டன மதனால்
10நோயில ராகநின் புதல்வர் யானும்
 வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்
15செல்வ லத்தை சிறக்கநின் னாளே.  (196)

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. பாண்டியன்
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை
ஆவூர் மூலங்கிழார் பாடியது.

     உரை: ஒல்லுவது ஒல்லும் என்றலும் - தம்மாற் கொடுக்க
இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும்; யாவர்க்கும்
ஒல்லாது  இல்லென  மறுத்தலும் - யாவர்க்கும்  தம்மாற் கொடுக்க
இயலாத பொருளை இல்லை  யென்று  சொல்லி  மறுத்தலுமாகிய;
இரண்டும்  ஆள்வினை  மருங்கில்   கேண்மைப் பால் - இரண்டும்
தாளாண்மைப் பக்கத்து உளவாகிய நடபின் கூற்றினுள்ளன; ஒல்லாது
ஒல்லும் என்றலும் - தனக்கு இயலாததனை இயலுமென்றலும்; ஒல்லுவது
இல்லென மறுத்தலும் - இயலும் பொருளை இல்லையென்று
மறுத்தலுமாகிய; இரண்டும் வல்லே இரப்போர் வாட்டம் - இரண்டும்
விரைய இரப்போரை மெலிவித்தல்; அன்றியும் புரப்போர் புகழ்
குறைபடூஉம் வாயில் - அன்றியும் ஈவோர் புகழ் குறைபடும் வழியாம்;
இனி அனைத்தாகியர் இப்பொழுது நீ எம்மளவிற் செய்த செய்தியும்
அத்தன்மைத்தாகுக; இது எனைத்துத் சேய்த்துக் காணாது கண்டனம் -
இஃது எத்துணையும் எங்குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம்
கண்டேம்; அதனால் - அத் தீங்கினால்; நின் புதல்வர்
நோயிலராக - நின் பிள்ளைகள்
நோயின்றியே யிரப்பாராக;