பக்கம் எண் :

435

 

யான் பரிசிலன்-; மன்னும் அந்தணன் - அதுவன்றியும் நிலைபெற்ற
அந்தணன்; நீ-; வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் -
பகைவரைப்  போர்  செய்யு   முறைமையாற் பொருது தாழ்விக்கும்
வாளால் மேம்படுபவன் ஆதலால்; நினக்கு யான் கொடுப்பக்
கொண்மதி - நினக்கு யான் தரக் கொள்வாயாக; அடங்கா மன்னரை
யடக்கும் - சினத்தையுடைய போராலே வேந்தரை மிகை யடக்கும்;
மடங்கா விளையுள் நாடு கிழவோய் - மடக்கப்படாத மிக்க
விளைதலையுடைய நாட்டை யுடையோய் எ-று.

     மடக்குதல், போகம் ஒருக்குதல். பலவின் கனி கவர்ந்து உண்ட
கடுவன், மந்தியொடு  சிறந்து  சேண்  விளங்கிக்  கழை மிசைத் துஞ்சும்
என்றதனால், நீயும்  இவரை  வரைந்துகொண்டு  இன்புற்று வாழ்தல்
வேண்டுமென்பது தோன்ற நின்றது. “யானே பரிசிலன்”என்பதனால் நினக்கு
என் குறை முடிக்க வேண்டுமென்பதூஉம், “அந்தணன்”என்றதனால், யான்
தருதற்குரியே னென்பதூஉம் கொள்ளப்படும்.

      உலகத்து மகட்பேசி விடக் கொடுத்தலை யன்றித் தாமே இவரைக்
கொள்வாயாக என்று இரந்து கூறினமையின், இது, பரிசிற்றுறையாயிற்று.

      விளக்கம்: மலையிடத்தே  நின்று   காய்ப்பினும்,   பலா,  குறவராற்
காக்கப்படுதலின்,   காவல  ரறியாது  கொண்டமை  தோன்ற,  “பலவின்
கனிகவர்ந்துண்ட  கடுவன்” என்றார். கடுவனுக்கு விரல் கருத் திருத்தலும்
மந்திக்கு முகஞ் சிவந்திருத்தலும் இயல்பாதலின், “கருவிரல் கடுவ”னென்றும்
“செம்முக மந்தி”என்றும்  கூறினார். மலையிடத்தே பல்வகைக் காட்சிகள்
காணப்படுவனவாயிருக்க,  பலாக்கனி  யுண்ட   கடுவன் மந்தியொடு கூடிக்
கழைமிசைத் துஞ்சும் காட்சியை வரைந் தெடுத்தோதியதன் கருத்து இது
வென்பாராய், உரைகாரர் “பலவின்......தோற்றி நின்றது”என்றார். பகைவர்
உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத் தழிப்பதுபற்றி, “நிணந்தின்று செருக்கிய”
என்றார். இஃது இலக்கணை. சிறப்பு தலைமை. பெண் பேசுதற்கும்
கொடுத்தற்கும் தூது போதலும், காதல ரிருவருள் ஒருவர்க் கொருவரது காம
நிலையுரைத்தலும்,   இவைபோல்வன  பிறவும்  செய்தலும்  பார்ப்பனர்க்கு
நிலையுரைத்தலும், இவைபோல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு
அமையுமெனத் தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்கள்
கூறுதலின், “மன்னும் அந்தணன்”என்றார். யான் எனக்குரிய முறையில்
செய்வன செய்தல்போல, நீயும் நினக்குரிய செயலாகிய வாண்மேம் படுதலை
முறைபிறழாது செய்கின்றா யென்பார், “வரிசையில் வணக்கும்”என்றார்.
யான் அந்தணன்; நீ வாள் மேம்படும் மரபினாய் என்பதாம். வாள் மேம்படு
மரபிற் றோன்றியதற்கேற்ப வேந்தர் மிகையை யடக்குகின்றாயென்பார்,
“அடங்கா மன்னரை யடக்கும் கிழவோய்”என்றார். போகம் பல தலையாப்
பல்கிப் பெருகுதலின், மடக்குதல் “போக மொருக்குதல்”எனப்பட்டது.
ஒருக்குதல், வரையறுத்தல். பாரி மகளிரைக் கபிலர் மீள இருங்கோவேளிடம்
கொண்டு செல்லுகின்றாராதலின், விச்சிக்கோ அவர் வேண்டுகோளை
ஏற்கவில்லை யென்பது விளங்குகின்றது.