| துறை யென்றார். தண் பணை - மருதநிலம். நாம் - அச்சம். போர் நிகழுமிடத்துப் பகைவர் நாட்டு விளைவயல்களைக் கெடுப்பதும், நீர்நிலைகளைச் சிதைத்தழிப்பதும், நெல் கரும்பு முதலியன விளையும் மருதநிலங்களைப் பாழ் செய்வதும், மக்கள் குடியிருக்கும் ஊர்களைத் தீயிட்டழிப்பதும், அவர்தம் பொருளைச் சூறையாடுவதும் நிகழ்வது குறித்தே, இப்போர் நிகழ்ச்சி சான்றோர்களால் வெறுக்கப்படுகின்றன. இதனை இச் சான்றோர் விரித் தோதுவது வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுவித்தல் கருதி யென்றறிதல் வேண்டும்.தோல்பரப்பி கவர்பூட்டி, களிறு படிவித்துப் புலங்கெட இறுக்கும் தானை யென இயைவது விளங்க, தோல்....முடிக்க என்றார். பாகலையுடைய தண்பணை, காடறியாத் தண்பணை யெனக் கொள்க. கவர்வு, விருப்பாகும்என்பது தொல்காப்பியம்; அதற்கேற்பக் கவர்பூட்டி யென்பதற்கு விரும்பிக் கொள்ளையூட்டி என்றும், புலம் என்பது நாட்டிற்கும் பொருந்துதலால், புலம் கெட வென்பதற்கு நாடழிய வென்றும் பொருள்கொள்ளலாம் என்றார். இறுத்தல் - தங்குதல். தங்குதலை விடுதலென்பதும் வழக்காதலால், இறுக்கும்என்பதற்கு விடும் என்று உரை கூறினார். 17. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை இச் சேரமன்னனின் இயற்பெயர் சேய் என்பது. இவன் சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்தவன். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது பற்றி இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யெனப்படுகின்றான். வேழ நோக்கின் விறல் வெஞ்சேய் என இவனைக் குறுங்கோழியூர்கிழார் பாராட்டுவர். இவன் காக்கும் நாடு புத்தேளுலகத் தற்று என்பது. இவனுக்கும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் ஒருகால் நடந்த போரில் இச்சேரமான் தோல்வியுற்று அவனாற் சிறைப்படுத்தப்பட்டான். அச் சிறையினின்றும் தன் வலியினால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் அரசுகட்டிலிற் சிறப்புற்றான்.இவன்பால் நல்லிசைச் சான்றோர் பலர்க்கும் பேரீடுபா டுண்டு. இவனது இறுதிக் காலத்தே, வானத்தே ஒரு மீன் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி நாடாளும் வேந்தர்க்கு எய்தும் தீங்கினை யுணர்த்தும் குறியென்று அக் காலத்தவர் கருதியிருந்தனர். இக்காலத்தும் ஞாயிற்றினிடத்தே காணப்படும் கருப்புக்குறியே இப்போது நிகழ்ந்த போர்க்கும் வற்கடத்துக்கும் காரணமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனரன்றோ! மீன் வீழ்ச்சி கண்ட சான்றோருள் கூடலூர்கிழார் என்பவர் பெரு வருத்தமெய்தி ஏழுநாள் கழித்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யிறந்தானென்றறிந்தார். அறிந்தவர்,அப்போது தாம் கொண்ட கையறவை ஒரு பாட்டில் (புறம்.229) குறித்துள்ளார்; அஃது இந்நூலுள்ளே யுளது.
இப்பாட்டில் ஆசிரியர் குறுங்கோழியூர்கிழார், இச்சேரமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தன் வலியாற் றப்பிச் சென்று அரசுகட்டி லேறியிருக்க, அவனைக்கண்டு; குடவர் கோவே, சேரர் மரபைக் காத்தவனே, தொண்டிநகரத்தோர் தலைவனே, நின்னைக் காணவந்தேன் என்று
|