பக்கம் எண் :

97

    

தஞ்சம் - யானோ  எளியேன்;  பெரும-; இவ் வுலகத்துச் சான்றோர்
செய்த நன்றுண்  டாயின்  -  இவ்வுலகத்தின்கண்  நற்குணங்களால்
அமைந்தோர் செய்த நல்வினை யுண்டாயின்; இமயத்து ஈண்டி- இமய
மலையின்கண்ணே திரண்டு; இன்குரல் பயிற்றி - இனிய ஓசையைப்
பயிற்றி; கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல் துளியினும் பல
வாழிய - கீழ் காற்றால் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய
பல  துளியினும் பல காலம் வாழ்வாயாக எ-று.

      நிலம் புடை பெயர்வதாயினும் என்பதற்கு ஊழி பெயருங் காலத்து
யாவரும்  செய்த  இருவினையும்  நீங்குதலின்,  அக்காலத்தும்  செய்தி
கொன்றோர்க்கு உய்தியில்  லென்றும்,  நிலத்துள்ளார்  யாவரும்  இவர்
கூற்றிலே நிற்பாராயினும் என்றும் உரைப்பாரு முளர். புன்கம் இவன்பாற்
செல்வதற்கு முன்பு பெற்ற உணவாகவும்,  அமலைக்  கொழுஞ்  சோறு
இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க. அன்றிச், சென்ற இடந்தோறும்
பெற்ற  உணவாக  வுரைப்பினு  மமையும்.  மன்றத்துச்  சூடு  கிழித்த
வொக்கலொடு கூட வேண்டு மொழி பயிற்றி ஆர்ந்த  பாணர்க்கெனக்
கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர் போலக் கூறினார்.

     ஆயிழை  கணவ,  செய்தி  கொன்றோர்க் குய்தி யில்லென அறம்
பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வ முழுதுஞ் செய்தோன், எங்கோன்
வளவன் வாழ்கவென்று காலை  யந்தியும்  மாலை  யந்தியும்  நின்றாள்
பாடேனாயின், பல் கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்;
சான்றோர்  செய்த  நன்றுண்டாயின்,  நுண்  டுளியினும்  பல   காலம்
வாழ்வாயாக  வெனக் கூட்டுக.

     கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின்,ஆன்முலை
யறுத்த வெனவும்,  மகளிர்  கருச்சிதைத்த  வெனவும்,  குரவர்த்  தப்பிய
வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது பரிசில் பெற்றுப் போகின்றானை
நீ எம்மை நினைத்து வருவையோ வென்றாற்கு, இவ்வாறு செய்த நின்னை
வளவன் வாழ்க வென்று பாடேனாயின்,  யானிருக்குமிடத்துப் பல் கதிர்ச்
செல்வன் படுதலறியான்; அதனால் இம்மை யின்பம் பெற்றேன் எனவும்,
செய்ந்நன்றி கொன்றோர்க்கு உய்தி யில்லை யெனவே மறுமையின்கண்
நரகம் புகுவே னெனவும் கூறியதாகக் கொள்க.

     விளக்கம்: ஆன் முலை யறுக்கும்  கொடியவர்குறிப்பு அதனாற்
பெறும் பயனைக் கெடுப்பதென்பதாதலின், அதற் கேற்பவே உரை கூறினார்.
குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கு மெனத்
திருத்தப்பட்டிருக்கிறது.  இத்  திருத்தம்   பரிமேலழகர்   காலத்தேயே
செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது. நிலம்  கீழ்
மேலாங் காலமாவது  நில  நடுக்கத்தால்  மேடுபள்ள  மாதலும்,  பள்ள
மேடாதலுமாகிய காலம். இமயம் கடலாகவும், அரபிக்கடல்  நிலமாகவும்
இருந்த   காலமு  முண்டென்ப.  மண்ணுலகம்  விண்ணுலக  மென்பன
தலைகீழாக மாறுங் காலமாகிய பேரூழிக் காலமெனச் சமய நூல்கள் கூறும்
இக்காலத்தில் வினைகள் மூலப்பகுதியில் ஒடுங்குமெனச் சாங்கிய நூல்களும்
மாயையி லொடுங்கு மெனச் சைவ நூல்களும்  பிறவும்  கூறலால். “ஊழி
பெயருங் காலத்து வினை நீங்குதலின்” என்று உரைகாரர் கூறுகின்றார்.