| புன்புலம், புன்செய்க்கொல்லை. மயக்குதல் - கலத்தல், தேன் மயங்கு பாலினும் இனிய (ஐங்.203) என்றாற் போல. முயலின் சூட்டிறைச்சியைக் கிழித்தெடுப்பது தின்றற்காகையால், கிழித்த ஒக்கல் என்றதற்கு, தின்ற ஒக்கல் என உரை கூறினார். அருந்திய வென்பது ஆர்ந்த வென வந்தது, ஏற்றினம் மேய லருந்தென ((ஐங்.93) என வருதல் காண்க. படுபறியலன் - படுதல் ஈண்டு தோன்றுதல் என்னும் பொருளது; எற்படக் கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்...... அரிக்கணம் ஒலிக்கும் (முருகு.74-76) என்றாற் போல. ஞாயிறு வாழ்நாட் கலகா மென்பது, வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம் (நாலடி:22) என்று பிறரும் கூறுதல் காண்க. மழை. மழையைச் சொரியும் முகின்மே னிற்றலின், முகில் என வுரைத்தார். தன்னைப் பிறன்போல் வைத்துக் கூறலும் உயர்ந்தோர் கூற்றுட்படும் மரபுகளுள் ஒன்றாதலின், பாணர்க்கெனத் தம்மையும் அகப்படுத்திக் கூறினார். ஒழுக்கமுடைய சான்றோர் தீயவற்றை வழுக்கியும் வாயாற் சொல்லாராதலால், சொல்லுமிடத்து அத் தீமையை மறைத்து வேறுபாட்டாற் கூறுவது மரபாயிற்று. அதனால், ஆன் முலை யறுத்த வென்றும், தப்பிய வென்றும் கூறினார். இவை யாவும் கொலைப் பொருள் என அறிக. 35. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்குக் குடிகள் இறுக்க வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் இறுக்கப்படாமல் அரசற்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி விடுதரல் வேண்டுமெனக் குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை யடைந்து, நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே, நீ குடிமக்கட்குக் காட்சி யெளிய னாதல் வேண்டும்; நின் கொற்றக் குடை வெயில் மறைத்தற்குக் கொண்ட தன்று; குடிகட்கு அருள் செய்தற்பொருட்டு; நின் கொற்றமும் உழவர் உழு படையூன்று சால் மருங்கில் உண்டாகும் விளை பயனேயாகும்; இயற்கையல்லாதன தம் செயற்கண்ணே தோன்றிய விடத்தும் மக்கள் வேந்தனையே தூற்றுவர்; ஆதலால்,நீ நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது பகடு புறந்தரும் குடிகளையும் ஏனைக் குடிகளையும் ஓம்பி அவர் மொழி கொண்டு ஒழுகுதல் வேண்டும்; அவ்வாறு செய்யின் பகை வேந்தரும் நின்னை வணங்கி வாழ்வர் என்று அறிவுறுத்திச் செய்களின் பொருட்டுச் செலுத்தக்கடவ கடனை வீடு பெற்றுச் சென்றார் அக்காலையவர் பாடிய பாட்டு, இப் பாட்டு
| நளியிரு முந்நீ ரேணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும் | 5. | அரசெனப் படுவது நினதே பெரும | | அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத் |
|